நீங்க அமெரிக்காவுக்குள் வரவே கூடாது! பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு டிரம்ப் வைத்த ‘செக்’?
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்கள் அமெரிக்காவுக்கு வந்தால் சில பயங்கரவாதிகள் ஊடுருவலாம் என்ற காரணத்தால் டிரம்ப் இந்த முடிவை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் விரைவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடைவிதிக்க உள்ளதாக புதிய தகவல் பரவி கொண்டு இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களை காரணம் சுட்டி காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்…
காரணம் என்ன?
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்கள் அமெரிக்காவுக்கு வந்தால் சில பயங்கரவாதிகள் ஊடுருவலாம். அப்படி நடந்தால் அது தங்களுடைய நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்ற காரணத்தால் இந்த முடிவை அமெரிக்க தற்போது எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரிகள், இந்த நடவடிக்கை இரு நாடுகளின் அரசுகளின் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும், அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
உறுதியானால் என்ன நடக்கும்?
அமெரிக்க இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் சூழலில், ஒரு வேலை உறுதியாகி தடை அறிவிக்கப்பட்டால் முதற்கட்ட நடவடிக்கையாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டவர்களுக்கு அனைத்து வகையான விசாக்கள் வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படும். அதைப்போல அடுத்ததாக, நிரந்தர குடியுரிமை அனுமதி (கிரீன் கார்ட்) வழங்கப்படாது.
கிரீன் கார்ட் என்பது அமெரிக்காவுக்கு சென்று வேலை பார்க்கவோ..அல்லது நிரந்தரமாக அங்கேயே தங்குவதற்கு முடிவு செய்தால் இந்த கார்டு வழங்கப்படும். எனவே, தடை உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றால் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் குடிமக்களுக்கு அந்த கார்டு வழங்கப்படாது. அதைப்போல, அமெரிக்காவில் தற்போது தங்கியுள்ள பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் குடியுரிமையாளர்கள், நாட்டை விட்டு வெளியேறினால், மீண்டும் நுழைவதிலும் பிரச்சினை ஏற்படும். இவ்வளவு பிரச்சினைகள் இருப்பதன் காரணமாக டொனால்ட் டிரம்ப் இந்த முடிவை யோசித்து எடுக்கலாம் என கூறப்படுகிறது.
எதிர்ப்பு : பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுகள், இந்த முடிவுக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. இது இருதரப்பு உறவுகளை பாதிக்கும் மற்றும் அவர்களின் குடியுரிமையாளர்களின் உரிமைகளை மீறுகிறது என்று கூறுகின்றனர். மேலும், இந்தத் தடை அமல்படுத்தப்படுவது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளிவரவில்லை. இது குறித்து சில ஆங்கில ஊடகங்களின் செய்திகள் அடிப்படையில், இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது.