வாரத்தில் 40 மணிநேரம் அலுவலகத்தில் இருந்து பணிபுரிய வேண்டும்! ட்விட்டர் ஊழியர்களுக்கு, எலான் மஸ்கின் முதல் இ-மெயில்.!
ட்விட்டர் ஊழியர்களை, அலுவலகத்திலிருந்து பணிபுரியுமாறு கூறி அதன் தலைவர் எலான் மஸ்க், அவர்களுக்கு முதல் இ-மெயில் அனுப்பியுள்ளார்.
ட்விட்டரின் தலைமை பொறுப்பேற்று 2 வாரங்கள் ஆன நிலையில், அதற்குள் மஸ்க் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டார். ட்விட்டரின் பணியாளர்களை நீக்கியது, ப்ளூ டிக் சப்ஸ்கிரிப்சன் அம்சத்திற்கு மாதம் $8 விலை என பல அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
தற்போது ட்விட்டரின் பணியாளர்களுக்கு, அதன் தலைவர் எலான் மஸ்க் முதன்முறையாக இ-மெயில் அனுப்பியுள்ளார். மஸ்க் இ-மெயிலில் கூறியதாவது, இனி எங்கிருந்தும் பணி புரியலாம் என்ற “ரிமோட் ஒர்க்” முறையை அனுமதிக்க முடியாது, இனி வாரத்திற்கு பணியாளர்கள் குறைந்தது 40 மணிநேரம் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும், மேலும் இனி வரக்கூடிய காலம் கடினமாக இருக்கும் அதற்கு தயாராக இருங்கள் என்று கூறியுள்ளார்.
மஸ்க் மேலும் கூறியதாவது, வரும் சில தினங்களில் போலியான கணக்குகளை கண்டுபிடிப்பதை முதல் குறிக்கோளாக வைத்துக்கொள்ளுங்கள், ட்விட்டரின் சந்தாதாரர்(Subscription) மூலம் ட்விட்டரின் பாதி வருவாய் வர வேண்டும் என்று எலான் மஸ்க் தான் அனுப்பியுள்ள இ-மெயிலில் தெரிவித்துள்ளார்.