அமெரிக்காவில் ஒலிக்கும் கமலா ஹாரிஸ் பெயர்.! அதிபர் வேட்பாளர் பைடன் தானா.?
US தேர்தல் 2024 : அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜோ பைடன் தடுமாறி வருவதால் கமலா ஹாரிஸை வேட்பாளராக மாற்ற குரல்கள் எழுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வேட்பாளராக மீண்டும் களமிறங்குகிறார். குடியரசு கட்சி சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களமிறங்குகிறார். ஜனநாயக கட்சியின் துணை அதிபராக ஆசிய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் பொறுப்பில் இருக்கிறார்.
இப்படியான சூழலில் கடந்த வாரம் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த விவாத நிகழ்ச்சியில் ஜோ பைடன் தடுமாறினார். இதனால் அப்போதைய விவாத நிகழ்வில் அதிக ஆதரவு டொனால்ட் டிரம்பிற்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து ஜோ பைடன் கலந்து கொண்ட சில நிகழ்வுகளிலும் பேச்சில் தடுமாற்றம் ஏற்பட்டது.
அமெரிக்க குடியரசு தின விழாவில் , சுதந்திர தின வாழ்த்துக்கள் என கூறியது, தான் அமெரிக்காவின் முதல் பெண் கறுப்பின துணை பிரதமர் என தவறுதலாக கூறியது 2020 தேர்தலில் டிரம்ப்பை தோற்கடிப்பேன் என கூறியது என சில மேடைகளில் ஜோ பைடன் தடுமாறியது ஜனநாயக கட்சியினரை சற்று கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனால், ஜனநாயக கட்சியினர் சிலரே ஜோ பைடனை வேட்பாளர் பொறுப்பில் இருந்து மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இருந்தும், தான் அதிபர் தேர்தல் களத்தில் தான் இருக்கிறேன். நான் பின்வாங்க போவதில்லை என்று 81 வயதான ஜோ பைடன் உறுதியாக பிரச்சாரத்தில் கலந்து கொண்டு வருகிறார்.
அதே நேரத்தில், தேர்தல் குறித்த கருத்துக்கணிப்புகளில் அதிபர் ஜோ பைடனுக்கு கிடைக்கும் வாக்கு சதவீதத்தை விட துணை பிரதமராக பொறுப்பில் இருக்கும் கமலா ஹாரிஸுக்கு (துணை பிரதமர் கருத்து கணிப்பில்) அதிக வாக்குகள் கிடைக்கின்றன என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது கருத்து கணிப்பில் ஜோ பைடனை பின்னுக்கு தள்ளி டொனால்ட் டிரம்ப் முன்னேறி வருகிறார். ஆனால் துணை அதிபர் கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னேறி வருகிறார். CNN செய்தி நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பில் 45- 47 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளார் கமலா ஹாரிஸ். அதனை விட 5 சதவீத வாக்குகள் குறைவாக தான் ஜோ பைடன் பெற்று இருந்தார்.
அதே போல Reuters நடத்திய கருத்து கணிப்பிலும் ஜோ பைடனை விட கமலா ஹாரிஸ் அதிக வாக்குகள் பெறுவார் என கூறப்பட்டுள்ளது . இதனால், தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு பதிலாக ஆசிய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸை களமிறக்க உட்கட்சியில் உள்ளவர்களே சிலர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது. இதனால் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்கள் உள்ளதால் வேட்பாளர் மாற்றங்கள் உள்ளதா என்பது அடுத்தடுத்த நகர்வுகளில் தெரியவரும்.