அடுத்த கொரோனாவாக மாறுகிறதா குரங்கம்மை.? தற்போதைய நிலவரம் என்ன.?

Monkey Pox

ஆப்பிரிக்கா : தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவில் பரவி வரும் குரங்கம்மை தொற்று பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குரங்கம்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

2019இல் சீனாவில் தோன்றிய கொரோனா பெருந்தொற்று 2020, 2021 என இரு ஆண்டுகள் உலகையே ஆட்டிப்படைத்தது. அதனால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. உலகளாவிய ஆராய்ச்சியாளர்களால் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அந்த பெருந்தொற்றில் இருந்து மக்கள் மீண்டு வந்தனர். தற்போதும் அதன் பாதிப்புகள் உலகில் ஆங்காங்கே இருந்து கொண்டு தான் இருக்கிறது.

இப்படியான சூழலில், ஆப்ரிக்கா நாட்டில் தற்போது பரவி வரும் குரங்கம்மை எனும் MPox தொற்று உலக சுகாதார அமைப்பையே சற்று உற்றுநோக்க வைத்துள்ளது. இந்த MPox-ஆல் மீண்டும் ஓர் ஊரடங்கு நிலை ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடும் அளவுக்கு இதன் தொற்று வேகம் தற்போது ஆப்பிரிக்காவில் சற்று அதிகரித்துள்ளது.

ஆப்பிரிக்காவில் காங்கோவில் கடந்த 2023 செப்டம்பரில் குரங்கம்மை தொற்று வேகமாகப் பரவ தொடங்கியது. அங்கு தான்  தற்போது வரையில் குரங்கம்மையால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இறப்பு விகிதம் அதிகம் இல்லை என்றாலும் கர்ப்பிணிப் பெண்கள்,  வயதானோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு குரங்கம்மை தொற்று பாதிப்பு அதிகம் இருக்கும் என சுகாதார அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த MPox தொற்றானது கிளாட் 1, கிளாட் 1பி எனும் இரண்டு வகைகளாக உள்ளது. தற்போதைய தகவலின்படி, சுமார் 14 ஆயிரம் பேருக்கு குரங்கம்மை தொற்று அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், 511 இறப்புகள் இதுவரை பதிவாகியுள்ளன. இறப்பு விகிதம் எண்ணிக்கை அளவில் சிறியதாகக் காணப்பட்டாலும், 14 ஆயிரம் பேரில் நோய் தீவிரம் என்பது குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே கண்டறியப்பட்டது. அதன் காரணமாகவே இது உலகளவில் குரங்கம்மை முன்னெச்சரிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உலகளவில் குரங்கம்மை தொற்று என்பது பெரிய அளவில் கண்டறியப்படவில்லை என்றாலும், ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் குரங்கம்மை பாதிப்பு அதிகளவில் உள்ளது. இதனால், மற்ற நாடுகள் தங்கள் எல்லைப் பகுதியில் கண்காணிப்பை தற்போது தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா இன்று சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் குரங்கம்மை குறித்தும் , அது தொடர்பாக மேற்கொள்ள உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா அதிகாரிகளிடம் மேற்கொண்ட ஆலோசனைகளில், குரங்கம்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாட்டின் அனைத்து முக்கிய நுழைவுகளான விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் தரைவழிப் பாதைகளில் உள்ள சுகாதார மையங்கள் மூலம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டன. நாடு முழுவதும் நோய் கண்டறியும் 32 பரிசோதனைக் கூடங்கள் தயார் நிலையில் இருக்குமாறும், குரங்கம்மை தொற்று அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களை உடனடியாகக் கண்டறியவும், அவர்களைத் தனிமைப்படுத்தவும் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் உத்தரவிட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்