எந்தெந்த பொருட்கள் வரிகளால் பாதிக்கப்படும்? அமெரிக்கா விதித்துள்ள வரிகள் விவரம்.!

உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். வரிகள் அதிகரிப்பால் எந்தெந்த பொருட்கள் விலை அதிகமாகும்? என்று பார்க்கலாம்.

US tariffs

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3) பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால், உலக நாடுகளின் இறக்குமதிக்கு வரி விதித்தது.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய டிரம்ப், “America First” கொள்கையின் அடிப்படையில், ஒவ்வொரு நாட்டின் மீதும் 10% முதல் 49% வரை ரெசிப்ரோக்கல் வரி விதிக்கப்படுகிறது. இந்தியா மீது 26% வரி விதிக்கப்பட்டுள்ளது, இது ஏப்ரல் 9 முதல் அமலுக்கு வரும். இதை ‘விடுதலை நாள்’ என்று குறிப்பிட்ட டிரம்ப், இந்த நடவடிக்கை அமெரிக்க பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்கிறார்.

இந்தியாவைத் தவிர, டிரம்ப் மற்ற நாடுகளுக்கும் வரி அறிவித்துள்ளார். அதன்படி, சீனாவுக்கு – 34 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு – 20 சதவீதம், தென் கொரியாவுக்கு – 25 சதவீதம் எனவும் ஜப்பானுக்கு – 24 சதவீதம், தைவானுக்கு – 32 சதவீதம் எனவும் வரி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு வேளாண், கெமிக்கல் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு 10% அடிப்படை சுங்க வரியும், குறிப்பிட்ட நாடுகளை இலக்காகக் கொண்ட பரஸ்பர சுங்க வரிகளும் விதிக்கப்படுவதால், பல பொருட்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிகள் அமெரிக்க இறக்குமதியாளர்களால் செலுத்தப்படுவதால், அவை பெரும்பாலும் நுகர்வோருக்கு விலை உயர்வாக பரிமாறப்படும்.

பாதிக்கப்படக்கூடிய பொருட்களின் பட்டியல்

எலக்ட்ரானிக்ஸ்

சீனா (34% பரஸ்பர வரி), மேலும் தைவான், தென் கொரியா போன்ற எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பெரிய அளவிலான வரிகளை சந்திக்கும். இவை ஆப்பிள் ஐபோன்கள் முதல் தொலைக்காட்சிப் பெட்டிகள் வரை அமெரிக்காவிற்கு மின்னணுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் உள்ளன. இதில், ஐபோன்கள் பெரும்பாலும் சீனாவில் தயாரிக்கப்படுகின்றன, மேலும் தொலைக்காட்சிகள் போன்ற பொருட்களின் விலை கணிசமாக உயரலாம்.

வாகனங்கள் மற்றும் வாகன பாகங்கள்

இறக்குமதி வாகனங்களுக்கு 25% வரியுடன் 10% அடிப்படை வரியும் சேர்க்கப்படும், இதனால் வாகனங்களின் விலை $2,500 டாலர் முதல் $20,000 டாலர் வரை உயரலாம் என ஆண்டர்சன் பொருளாதார குழு மதிப்பிடுகிறது. அமெரிக்காவில் தயாரிக்கப்படும் சில வாகனங்களில் பயன்படும் இறக்குமதி பாகங்களும் விலை உயர்வை சந்திக்கும்.

ஆடைகள் மற்றும் காலணிகள்

அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஆடைகள் மற்றும் காலணிகள் சீனா (34% வரி), வியட்நாம் (46% வரி), மற்றும் பங்களாதேஷ் (37% வரி) போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் வால்மார்ட், டார்கெட் போன்ற கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலை உயரும்.

மது பானங்கள் மற்றும் ஒயின்கள்

இத்தாலி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து வரும் ஒயின்களுக்கு 20% பரஸ்பர வரியும், ஸ்காட்லாந்து விஸ்கிக்கு (யுனைடெட் கிங்டம்) 10% வரியும் விதிக்கப்படும். இதனால் அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பானங்களின் விலை உயர வாய்ப்புள்ளது.

 மரச்சாமான்கள்

அமெரிக்காவில் விற்கப்படும் 30%-40% தளபாடங்கள் சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த நாடுகள் மீதான உயர் வரிகள் தளபாடங்களின் விலை உயர வாய்ப்புள்ளது.

காபி மற்றும் சாக்லேட்

அமெரிக்காவிற்கு 80% காபி பீன்ஸ் பிரேசில் மற்றும் கொலம்பியா (இரண்டிற்கும் 10% வரி) போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து வருகிறது. சாக்லேட் தயாரிப்பிற்கு தேவையான கோகோ பீன்ஸ், கோட் டி’ஐவோரி (21% வரி) மற்றும் ஈக்வடார் (10% வரி) போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால், அவற்றின் விலையும் உயரும்.

சுவிஸ் கடிகாரங்கள்

சுவிட்சர்லாந்து இறக்குமதிகளுக்கு 31% பரஸ்பர வரி விதிக்கப்படுவதால், ஸ்வாட்ச் முதல் ரோலக்ஸ் வரையிலான கடிகாரங்களின் விலை உயரும்.

இந்த வரிகள் அமெரிக்க நுகர்வோருக்கு பணவீக்கத்தை அதிகரிக்கும் என பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது செமிகண்டக்டர்கள், மருந்துகள், மற்றும் முக்கிய தாதுக்கள் போன்றவைக்கு வரி விதிக்கப்படவில்லை, ஆனால் எதிர்காலத்தில் அவையும் பாதிக்கப்படலாம் என்று சொல்லப்டுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்