தொடங்கியது பூமிக்கு திரும்பும் இறுதிகட்ட பணிகள்… சுனிதா வில்லியம்ஸ் எப்போது தரையிறங்குவார்?
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து டிராகன் விண்கலத்திற்கு செல்லும் முன், விண்வெளி வீரர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

கலிபோர்னியா : சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சுமார் 9 மாதங்களுக்கும் மேலாக தங்கியிருந்த நிலையில், அவர்கள் பூமிக்குத் திரும்பும் பயணம் இன்று (மார்ச் 18) தொடங்குகிறது. நாசா அறிவித்துள்ளபடி, இன்று மார்ச் 18, SpaceX Crew Dragon விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்படவுள்ளனர்.
விண்வெளியில் 9 மாதங்களை கழித்த நிலையில் டிராகன் விண்கலம் மூலம் திரும்புகிறார். விண்வெளி ஆய்வு மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் 900 மணி நேரம் ஆய்வு செய்துள்ளனர். உடற்பயிற்சி கருவியை வடிவமைத்தல் உள்ளிட்ட 150 அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்டதாக நாசா அறிவித்துள்ளது.
தற்போது, டிராகன் விண்கலம் திரும்புவதற்கு வானிலை சரியானதாக உள்ளது, தற்போது அனைத்து சோதனைகளும் நடைபெற்று வருவதாக நாசா தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில், வில்லியம்ஸும் வில்மோரும் டிராகன் விண்கலத்திற்குள் நுழைந்துவிட்டனர், இறுதியாக ஹட்ச் மூடப்பட்டுவிட்டது.
நான்கு டிராகன் குழுவினரும் இப்போது காப்ஸ்யூலுக்குள் உள்ளனர். இன்று காலை 8:15 மணிக்கு டிராகன் விண்கலத்தின் ஹேட்ச் மூடப்பட்டது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து டிராகன் விண்கலத்திற்கு செல்லும் முன், விண்வெளி வீரர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
அந்த நிகழ்வுகளை ஒவ்வொன்றையும் நேரலையில் ஒளிபரப்ப நாசா ஏற்பாடு செய்துள்ளது. அதன்டி, பூமிக்கு புறப்படுவதை நாசா ஏற்கனவே நேரடி ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளது.
புறப்படும் மற்றும் தரையிறங்கும் நேரம்
புறப்படும் நேரம் (Undocking):
அமெரிக்க கிழக்கு நேரப்படி (ET): மார்ச் 18, 2025, அதிகாலை 1:05 மணி (AM), இந்திய நேரப்படி (IST): மார்ச் 18, 2025, காலை 10:35 மணிக்கு பூமியை நோக்கி புறப்பட தொடங்கும். அதாவது, அமெரிக்க கிழக்கு நேரம் இந்திய நேரத்தை விட 9 மணி நேரம் 30 நிமிடங்கள் பின்தங்கியுள்ளது. எனவே, ET அதிகாலை 1:05 மணி என்பது IST காலை 10:35 மணியாக மாறுகிறது.
தரையிறங்கும் நேரம் (Landing):
அமெரிக்க கிழக்கு நேரப்படி (ET): மார்ச் 18, 2025, மாலை 5:57 மணி (PM), இந்திய நேரப்படி (IST): மார்ச் 19, 2025, அதிகாலை 3:27 மணிக்கு தரையிறங்க தொடங்கும். அதாவது, ET மாலை 5:57 மணியில் 9 மணி நேரம் 30 நிமிடங்கள் சேர்க்கும்போது, IST அதிகாலை 3:27 மணியாகிறது. இது புளோரிடா கடற்கரையில் விண்கலம் பாரசூட்டுகள் மூலம் பாதுகாப்பாக தரையிறங்கும் தோராயமான நேரமாகும்.
LIVE: @NASA_Astronauts Nick Hague, Suni Williams, Butch Wilmore, and cosmonaut Aleksandr Gorbunov are packing up and closing the hatches as #Crew9 prepares to depart from the @Space_Station. Crew-9 is scheduled to return to Earth on Tuesday, March 18. https://t.co/TpRlvLBVU1
— NASA (@NASA) March 18, 2025
4 நிலைகளை
விண்கலம் தரையிறங்க 4 நிலைகளை கடக்க வேண்டும். அதன்படி, முதல் நிலையான விண்கலம் தயாராகும் பணி தொடங்கியது. 2ஆம் நிலை விண்கலம் பிரிதல், 3ஆம் நிலை சுற்றுவட்ட பாதையில் உயரம் குறைத்தல், 4ஆம் நிலை தரை இறங்குதல்.சுமார் 2 மணி நேரத்தில் விண்கலம் பிரியும். தற்போது, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலத்தில் அமர்ந்த பின்னர் விண்கலம் புறப்படுவதற்கு தயாராகும்.
விண்கலத்தை பிரித்தல் (Undocking)
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து க்ரூ டிராகன் விண்கலம் பிரிக்கப்படும் பணிகள் காலை 8:15 மணிக்கு தொடங்கியது. எல்லா பணிகளும் சரியாக நடந்து 10:35 மணியளவில் முழுமையாக நிறைவடையும். இது பூமிக்குத் திரும்பும் பயணத்தின் முதல் படியாகும்.
பூமியை நோக்கிய பயணம்
விண்கலம் பிரிக்கப்பட்ட பிறகு, சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மற்றும் பிற விண்வெளி வீரர்களுடன் பூமியை நோக்கி பயணம் தொடங்கும்.
விண்கலம் தரையிறங்குதல்
க்ரூ டிராகன் விண்கலம் அமெரிக்காவின் புளோரிடா கடற்கரை அருகே மெக்ஸிகோ வளைகுடாவில் தரையிறங்கும். இது அந்நாட்டு உள்ளூர் நேரப்படி (EDT) இன்று மாலை 5:57 மணிக்கு நிகழும், ஆனால் இந்திய நேரப்படி நாளை மாலை 3:27 மணியாகும். வானிலை நிலவரங்களைப் பொறுத்து இந்த நேரம் சிறிது மாறுபடலாம்.
தரையிறங்கும் பணிகள்
தரையிறங்கிய பிறகு, நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் குழுவினர் விண்வெளி வீரர்களை விண்கலத்திலிருந்து பத்திரமாக வெளியேற்றுவார்கள். நீண்ட கால விண்வெளி வாழ்க்கை உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கலாம்என்பதால், தரையிறங்கிய பின் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் பணிகள் தொடங்கும்.
சர்வதேச விண்வெளி பயணம் :
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 2024 ஜூன் 5 அன்று போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்கள் திட்டமிட்டபடி 8 நாட்களில் திரும்ப முடியவில்லை. இதனால், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ-10 பணியின் மூலம் அவர்களை மீட்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த மார்ச் 15ம் தேதி பால்கன்-9 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட க்ரூ டிராகன் விண்கலம் மார்ச் 16 அன்று ISS-ஐ சென்றடைந்தது.இதனைத் தொடர்ந்து தற்போது பூமிக்கு திரும்பும் பயணம் நடைபெறுகிறது. மேலே குறிப்பிடப்பட்ட நேரங்கள் நாசாவின் சமீபத்திய அறிவிப்புகளின் அடிப்படையில் அமைந்தவை. அது வானிலை அல்லது தொழில்நுட்ப காரணங்களால் சிறிது மாறலாம்.