G7 உச்சி மாநாடு: இத்தாலி சென்றடைந்தார் பிரதமர் மோடி.. நிகழ்ச்சி நிரல் என்னென்ன?
ஜி7 மாநாடு: ஜி7 அமைப்பின் 50-வது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசானோ நகரில் நேற்று தொடங்கியது. ஜூன் 13 முதல் 15 வரை நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு இத்தாலிக்கு சென்றடைந்தார். சமீபத்தில், மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
இத்தாலியின் அபுலியா பகுதியில் நடைபெறும் ஜி7 அவுட்ரீச் அமர்வில், இத்தாலிய பிரதமர் மெலோனி தொகுத்து வழங்கும் ‘செயற்கை நுண்ணறிவு, ஆற்றல், ஆப்பிரிக்கா-மத்திய தரைக்கடல்’ என்ற தலைப்பில் நடைபெறும் பிரதமர் மோடி இன்ற பங்கேற்கிறார். இந்த அமர்வில் போப் பிரான்சிஸும் கலந்து கொள்கிறார்.
மேலும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் , இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரான், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோருடனும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், ஜி7 மாநாட்டின் அவுட்ரீச் அமர்வில் அவர் உரையாற்றுகிறார்.
கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் மோடி மரியாதையைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அவருடன் இருதரப்பு சந்திப்பு எதுவும் திட்டமிடப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் மோடி பேச்சு வார்த்தையில் ஈடுபடுவார் என்று தகவல் இருந்தாலும், அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்தியாவில் நடைபெற்ற G20 உச்சிமாநாட்டின் போது, உலகளாவிய தெற்கின் முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கும் G7 உச்சிமாநாட்டை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துவேன் என்று மோடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்தார். அப்போது அமெரிக்கா-உக்ரைன் இடையே 10 ஆண்டுகால பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.