அடுத்து வரும் நாட்களில் சில வெளிநாட்டு பணயக்கைதிகளை விடுவிப்போம்.! – ஹமாஸ் பயங்கரவாதக் குழு
ஹமாஸ் பயங்கரவாதக் குழு தாங்கள் அடைத்து வைத்துள்ள பல வெளிநாட்டு கைதிகளை வரும் நாட்களில் விடுவிப்போம் என்று கூறியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் கடுமையான போர் நடந்து வருகிறது.
இஸ்ரேலின் ராணுவம் ஹமாஸின் இருப்பிடமாக இருக்கும் காசா மீது மூன்று வாரங்களாக தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை ராக்கெட் குண்டுகளை வீசி வான்வழி தாக்குதல் மட்டுமே நடத்தி வந்த இஸ்ரேல், இப்போது தரைவழித் தாக்குதலையும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேலை சேர்ந்த ராணுவத்தினர், முதியவர்கள், குழந்தைகள் என 200க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளாக வைத்துள்ளனர். ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை, காசா நகரத்திற்கு மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிபொருள் எதுவும் வழங்கப்படாது என்றும் இஸ்ரேல் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதனால் லட்சக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர், மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதோடு, மின்சாரம் இல்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகினர். ஹமாஸின் பிடியில் இருக்கும் பணயக்கைதிகளை மீட்கும் முயற்சியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
இந்த நிலையில், தங்களிடம் இருக்கும் சில வெளிநாட்டு பிரஜைகளுடன் பல பணயக்கைதிகளையும் அடுத்த சில நாட்களில் விடுவிப்போம் என்று ஹமாஸ் கூறியதாக, ஹமாஸ் பயங்கரவாதக் குழுவின் இராணுவப் பிரிவு செய்தித் தொடர்பாளர்டி குரே அபு ஒபேடா தெரிவித்துள்ளார்.