ஒலிம்பிக்கில் ரஷ்யா கலந்துகொள்ள விடமாட்டோம்- ஜெலென்ஸ்கி.!
2024 ஒலிம்பிக்கில், ரஷ்ய விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்வதைத் தடுக்கப்போவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பாரிஸ்-இல் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய விளையாட்டு வீரர்கள் விளையாடுவதைத் தடுக்க முயற்சிப்போம் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். இதற்காக சர்வதேச அளவில் மக்களிடம் இது குறித்து பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
அதிபர் ஜெலென்ஸ்கி இது குறித்து பேசும்போது, சர்வதேச அளவில் நடத்தப்படும் ஒரு விளையாட்டுப்போட்டி நேர்மையான முறையில் நடத்தப்பட வேண்டும், சர்வதேச ஒலிம்பிக் தலைமையிடத்தில் போலித்தனத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது. ரஷ்யாவின் வீரர்களை உலக அரங்கில் விளையாடவைக்கும் முயற்சியைக் கண்டித்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ரஷ்ய விளையாட்டு வீரர்களை, மீண்டும் சர்வதேசப் போட்டிகளுக்கு விளையாட அனுமதிக்க விரும்பும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தற்போதைய தலைவர் தாமஸ் பாக் வெளியிட்ட அறிக்கைகள் குறித்து, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் தான் அவருடன் இது குறித்து பலமுறை பேசியுள்ளதாகவும், ஆனால் அவரிடமிருந்து இதற்கான எந்த பதிலும் இதுவரை நான் கேட்கவில்லை என்று ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
கொடுங்கோல் ஆட்சிபுரியும் நாடுகள், விளையாட்டை தங்கள் நலன்களுக்காக பயன்படுத்திக்கொள்வதை அவர் குற்றம் சாட்டினார். ஆனால் நாங்கள் அவ்வாறு நடக்க அனுமதிக்க மாட்டோம், விளையாட்டை அரசியல் மற்றும் தீவிரவாத செல்வாக்கிடமிருந்து காப்பதற்கு தேவையான எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பினால் உக்ரைனில் மக்கள் தங்களுக்கு பிரியமானவர்களின் உயிரை இழந்து வடிவருகின்றனர். இன்னும் அன்புக்குரியவர்களின் உயிரை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில், சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உக்ரேனியர்கள் இருக்கின்றனர். போரில் உயிரிழக்காமல் இருந்திருந்தால் உக்ரைன் மக்களும் தங்களது திறமைகளை உலகிற்கு கொண்டு வந்திருப்பார்கள்.
ரஷ்யா தனது போர் ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும் அதன்பிறகு தான் ஒலிம்பிக் பற்றியும், ரஷ்ய வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறுவது பற்றியும் பேசமுடியும். முன்னதாக, நவம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் மாநாட்டில், ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்களை பொதுவான ஒரு நடுநிலைக் கொடியின் கீழ் மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு கொண்டு வருவதற்கான நோக்கத்தை ரஷ்யாவின் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தெரிவித்திருந்தார்.
ரஷ்யாவின் இந்த நோக்கத்திற்கு தனது எதிர்ப்பை தெரிவித்த ஜெலென்ஸ்கி, அவ்வாறு நடுநிலைக்கொடியில் ரஷ்ய வீரர்கள் விளையாடினால், அந்த கொடி இரத்தத்தால் கறைபட்டதாக இருக்கும் என்று கூறினார். இதற்கிடையில் ரஷ்ய தரப்பில் இதற்கு, சர்வதேச விளையாட்டுகளில் இருந்து ரஷ்யாவை வெளியேற்றும் எந்தவொரு முயற்சியும் தோல்வியில் முடியும் என்று கூறியுள்ளது.