“மிரட்டலுக்கு பயப்படவே மாட்டோம்”..பதிலடி கொடுத்த ஹமாஸ்! மீண்டும் எச்சரித்த இஸ்ரேல் !
பிணைக்கைதிகளை விடுவிக்காமல் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என ஹமாஸ் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருந்தது. இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியிருக்கிறார்.
பிரச்சினை
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையில், இஇரு அமைப்பினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியும் இருந்தது. இந்த ஒப்பந்தத்தின் படி, ஹமாஸ் கைதியாக வைத்துள்ள 99 பிணைக் கைதிகளில் 33 பேரை விடுவிக்க வேண்டும், அதே நேரத்தில், இஸ்ரேல் தனது சிறைகளில் உள்ள 737 பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த நவம்பர் 19-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இருப்பினும், போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிறகு, இஸ்ரேல் காசா பகுதியில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களில் 65க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இதன் காரணமாக இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக ஹமாஸ் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. இதனால், “மறு அறிவிப்பு வரும் வரை பிணைக் கைதிகளை விடுவிக்க முடியாது” என ஹமாஸ் அறிவித்தது.
டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை
இதனால் மிகவும் கோபமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை கொடுத்து பேசியிருந்தார். செய்தியாளர்களை சந்தித்த அவர் ” காசாவில் உள்ள பிணைக்கைதிகள் அனைவரையும் வரும் சனிக்கிழமை மதியத்துக்குள் இஸ்ரேலிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால், இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டு வரப்படும். அதோடு மோசமான நிலை உருவாகும். நரகம் உருவாக்கப்படும்” என காட்டத்துடன் தெரிவித்தார்.
ஹமாஸ் பதிலடி
இதற்கு பதிலளித்த ஹமாஸ், டிரம்பின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய முடியாது என தெரிவித்துள்ளது. ஹமாஸ் பிரதிநிதி சாமி அபு சுஹ்ரி, “டிரம்பின் கருத்துக்கள் அமைதி பேச்சுவார்த்தைக்கு தடையாக செயல்படுகின்றன. அச்சுறுத்தலுக்கு எந்த மதிப்பும் இல்லை. இது நிலைமையை மேலும் மோசமாக்கும். எங்களுடைய மக்கள் மற்றும் போராளிகளின் உரிமைகளை பாதுகாக்க உறுதியாக இருக்கிறார்கள். பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறி வருகிறது. எனவே, இதனால், எங்கள் நடவடிக்கைகள் நியாயமானவை” என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல் கடும் எச்சரிக்கை
இதனையடுத்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர், “ஹமாஸ் அமைப்பு சனிக்கிழமைக்குள் (பிப்ரவரி 15, 2025) பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால், காசா பகுதியில் நிலவும் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வரும். தேவையேற்பட்டால், மீண்டும் போரை தொடங்குவதற்கான முழு உரிமையும் எங்களுக்கு உள்ளது. இஸ்ரேல் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயார். பிணைக்கைதிகளை விடுவிக்காமல் ஹமாஸ் தொடர்ந்து செயல்பட்டால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்” எனவும் எச்சரிக்கை விடுத்தது பேசியுள்ளார். இதன் காரணமாக அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.