ஹமாஸின் இராணுவத் திறன்களை அழிப்பதில் தெளிவான இலக்கை நிர்ணயித்துள்ளோம்.! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவை இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் அமைப்பினர் ஆக்கிரமித்த விவகாரத்தில், மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் இன்றுவரை ஹமாஸ் அமைப்பினர் மீது தொடர்ந்து பதிலடி தாக்குதல் நடத்திவருகிறது. அதன்படி, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே இன்றுவரை கடுமையான போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இருந்தும் பல உலக நாடுகள் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறி போரை நிறுத்துமாறு இரண்டு தரப்பினரிடமும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் இஸ்ரேல் போரை நிறுத்தாமல் நாளுக்கு நாள் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில் இதுவரை நடத்திய வான்வெளி தாக்குதலை தொடர்ந்து, தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஹமாஸின் இராணுவத்தையும் ஆளும் திறனையும் அழிக்கும் குறிக்கோளுடன் இஸ்ரேல் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், நாங்கள் போரின் மத்தியில் இருக்கிறோம். ஹமாஸின் இராணுவம் மற்றும் ஆட்சித் திறன்களை அழிக்கும் தெளிவான இலக்கை நாங்கள் நிர்ணயித்துள்ளோம். நாங்கள் இதை முறையாகச் செய்து வருகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “முதல் தடுப்பு நிலையை தகர்த்துள்ளோம். 2வது நிலை வான்வெளி தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 3 வது கட்டமாக காசா பகுதிக்குள் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தரைவழி ஊடுருவலை விரிவுபடுத்தியுள்ளது. வடக்குப் போர்முனையில் இஸ்ரேல் தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சிகளை இஸ்ரேல் தொடர்நது செய்து வருகிறது.”
“ஆனால் இதற்கு இன்னும் நேரம் ஆகலாம். ஏனென்றால் இதில் நிறைய குழிகள் இருக்கும். சிரமங்கள் இருக்கும், இழப்புகள் ஏற்படும். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இறுதியில், ஹமாஸ் நசுக்கப்படும். ஹமாஸ் தோற்கடிக்கப்படும். ஒருவேலை ஹமாஸ் தோற்கடிக்கப்படவில்லை என்றால், தீமையின் அச்சு வெல்லும். தீமையின் அச்சு வென்றால், சுதந்திர உலகம் இழக்கும்.” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.