“உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவரப்போகிறோம்” அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன்-ரஷ்யா போருக்கு ஒரு தீர்வை காண விரைவில் ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியுள்ளார்.

உக்ரைன்-ரஷ்யா போர் என்பது 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் தொடங்கியது. இன்னும் இந்த போர் முடியாமல் இருப்பதன் காரணமாக பரபரப்பான சூழலே நிலவி வருகிறது. இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த போருக்கு ஒரு தீர்வை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தோடு ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியுள்ளார்.
கடந்த, சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த டொனால்ட் டிரம்ப், உக்ரைன்-ரஷ்யா போருக்கு முடிவுகாண்பதற்காக உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியுடன் பலமுறை பேசியுள்ளதாகவும், ஸெலென்ஸ்கி உக்ரைனில் அமைதியை திரும்ப பெற விரும்புவதாகவும், புதினும் அதையே விரும்புவார் என நம்புவதாகவும் கூறினார்.
இது குறித்து பேசிய அவர் ” போா் நிறுத்தம் தொடா்பாக உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியிடம் பலமுறை பேசியுள்ளேன். போரை நிறுத்தவேண்டும் என்று தான் அவர்களும் விரும்புகிறார்கள். இது குறித்து நான் ரஷ்ய அதிபர் புடினுடன் சந்திப்பு நடத்தி அவரிடம் பேசவும் இருக்கிறேன். உக்ரைனில் தொடர்ச்சியாக வன்முறைகள் நிகழ்வதை தடுத்து, அங்கு அமைதியை நிலைநாட்டுவதே எங்களுடைய நோக்கம்.
போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இருநாடுகளுக்கிடையேயான சர்வதேச பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்கான நேரம் நெருங்கிவிட்டது. அமெரிக்கா, உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் முக்கியமான பங்காற்ற முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு அதிகமாக இருக்கிறது. இரு தரப்பும் சரியான ஒத்துழைப்பு வழங்கினால், போரை முடிவுக்கு கொண்டுவரவும் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மீட்டெடுக்கவும் முடியும்” எனவும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.