டிரம்புக்கு பிரகாசமாகும் அதிபர் பதவி? ‘எலக்ட்ரால்’ வாக்குகளில் டிரம்ப் முன்னிலை!
அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் டிரம்ப் அதிக எலக்ட்ரால் வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி இருக்கிறது. இது வரை எண்ணப்பட்ட வாக்குகளில் அதிக எலக்ட்ரால் வாக்குகளைப் பெற்று குடியரசு கட்சி சார்பாக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் முன்னிலைப் பெற்று வருகிறார்.
மேலும், எதிர்த்து போட்டியிடும் துணை அதிபரும், ஜனநாயக கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸ் பின்னடைவை சந்தித்து வருகிறார். இதுவரை வந்த முடிவுகளின்படி டொனால்ட் டிரம்ப் 198 எலக்ட்ரல் வாக்குகளை வெற்றி பெற்றுள்ளதாகவும், கமலா ஹாரிஸ் 112 எலக்ட்ரல் வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார்.
அதன்படி, பார்க்கையில் ஒரு சில முக்கிய மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் கைப்பற்றி இருக்கிறார். இதனால், அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதே நேரம், இன்னும் ஒரு சில முக்கிய மாகாணங்களில் கமலா ஹாரிஸ் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் இருந்து வருகிறார்.
மேலும், 9 முக்கியமான மாகாணங்களில் இன்னும் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கவில்லை. இதனால், அந்த மாகாணங்களையும் கமலா ஹாரிஸ் கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. மொத்தம் 538 எலக்ட்ரல் வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளை கைப்பற்றும் அதிபர் வேட்பாளர், அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.