“ஈரான் மீது குண்டு வீசுவோம்” – ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல்.!
அணு ஆயுதத் திட்டம் தொடர்பான அமெரிக்காவின் ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது குண்டு வீசுவோம் என்று எச்சரிக்கை விடுத்திருப்பது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் பதற்றத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற பிறகு ட்ரம்ப், ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்றும், அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார். ஆனால், ஈரான் இதை ஏற்க மறுத்து, தனது அணுசக்தி திட்டம் அமைதி நோக்கங்களுக்காக மட்டுமே என்று தொடர்ந்து வாதிட்டு வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் மேற்கு பாம் பீச்சில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், “ஈரான் ஒப்பந்தத்திற்கு வராவிட்டால், இதுவரை பார்த்திராத அளவுக்கு குண்டு மழை பொழியும். அவர்கள் என்னை சோதித்தால், ஈரான் என்ற நாடே இருக்காது,” என்று கடுமையாக எச்சரித்தார்.
இது ஒரு வெறும் அச்சுறுத்தல் மட்டுமல்ல, அமெரிக்காவின் இராணுவ திறனை பயன்படுத்துவதற்கு தயாராக இருப்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். மேலும், “நான் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன், ஆனால் ஈரான் அதை விரும்பவில்லை என்றால், அவர்களுக்கு வேறு வழி காட்டப்படும்,” என்று கூறினார்.
இதையடுத்து ஈரான் தரப்பில் இருந்து ஜனாதிபதி மசூத் பஷேஷ்கியன்,” ட்ரம்பின் இந்த அறிவிப்புக்கு பதிலளித்து, “அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம். எங்களுக்கு எதிராக என்ன செய்தாலும், அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்,” என்று தெரிவித்தார்.