பதிலுக்கு பதில் வரிப்போர்., சீனாவுக்கு மட்டும் 125% வரி! டிரம்ப் தடாலடி அறிவிப்பு!
பதிலுக்கு பதில் வரி விதித்ததால், தற்போது சீன பொருட்கள் மீதான வரியை கூடுதலாக 125% வரை உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு வரியைஅதிகரித்து உத்தரவிட்டார். இந்த வரி விதிப்பானது, மற்ற நாடுகள் என்ன வரி விதித்து இருக்குமோ அதே அளவு வரியை அமெரிக்கா மற்ற நாடுகளின் மீது விதித்துள்ளது.
இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதனை ஏற்று அதற்கு தகுந்தாற்போல தங்கள் வர்த்தகத்தை மாற்றி வருகின்றனர். இதில் சீனா மட்டும் விதிவிலக்காக அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில், அமெரிக்க பொருட்கள் மீது வரியை உயர்த்தியது. இதனால், கோபமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா விதித்துள்ள கூடுதல் வரியாய் ஏப்ரல் 8க்குள் நீக்கவில்லை என்றால் ஏப்ரல் 9 முதல் கூடுதல் வரி அமலுக்கு வரும் என கூறியது.
அதன்படி, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 50% வரி விதித்து, 104% வரையில் வரி விதிப்பை அமல்படுத்தியது. இதற்கு பதிலடி தரும் வகையில், சீனா, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் தற்போதைய 34 சதவீத வரியை 84 சதவீதமாக (அதே அளவு 50%) உயர்த்தியது.
இதனால் இன்னும் கோபமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா மீது இன்னும் கூடுதல் வரியை. விதித்துள்ளார். மேலும் பல்வேறு நாடுகளின் வலியுறுத்தல்களை அடுத்து அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி விதிமுறையை 90 நாட்கள் நிறுத்தி வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஆனால், இந்த 90 நாட்கள் நிறுத்திவைப்பு கொள்கையில் சீனா இல்லை என்பதும் குறிப்ப்பிடத்தக்கது.
தங்கள் புதிய பரஸ்பர வரி விதிப்பின் மீது பதிலடி தராத நாடுகளுக்கு வழக்கமான வரி முறை அடுத்த 90 நாட்களுக்கு இருக்கும் என்றும், சீனாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டு 125% வரையில் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
அமெரிக்காவும் சீனாவும் தங்கள் நிலைப்பாடுகளில் இருந்து பின்வாங்குவதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில், இதன் தாக்கம் உலக பொருளாதாரத்தில் நீண்ட காலம் எதிரொலிக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் இரு நாட்டு தலைவர்க்ளின் வரி போரில் அதிகம் பாதிக்கப்படுவது இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் செய்யும் பெரு வியாபாரிகளும், அதன் மூலம் பலமடையும் சிறு வியாபாரிகளும் தான்.