டிரம்ப் அதிரடி வரி விதிப்பு.! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! சீனா, கனடா, ஆஸ்திரேலியா, தைவான்….
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் இறக்குமதியாகும் வெளிநாட்டு பொருட்களுக்கு புதிய வரி விதிப்பை அறிவித்தார். இதற்கு பல்வேறு நாடுகள் தங்கள் எதிர்ப்புகளை கூறி வருகின்றன.

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு புதிய வரிகளை அறிவித்தார். இதில் குறைந்தபட்சம் 10 சதவீதத்தில் இருந்து ஒவ்வொரு நாடுகளை பொருத்தும் 49 சதவீதம் வரையில் வரி விதிக்கும் நடைமுறையை அறிவித்தார்.
இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு 30%, சீனாவுக்கு 34%, இலங்கை 44%, வியட்நாமுக்கு 46%, கம்போடியாவுக்கு 49% என அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் சுமார் 60 நாடுகளுக்கும் தனித்தனியாக புதிய இறக்குமதி வரி விதிப்பை நேற்று அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த வரி விதிப்பு குறித்து பல்வேறு நாடுகளும் தங்கள் எதிர் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
சீனா:
சீனா டிரம்பின் வரி நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்துள்ளது. அமெரிக்காவின் 34% வரி விதிப்பு எதிரொலியாக சீனா அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிகளை விதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இது உலகின் இரு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையே ஏற்கனவே நிலவும் வர்த்தகப் போர் என சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சீனாவின் கருத்துப்படி, இது உலகளாவிய விநியோகச் சங்கிலியை சீர்குலைத்து, பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
கனடா:
கனடா, அமெரிக்காவின் நெருங்கிய வர்த்தக நாடாக இருப்பதால், 25% வரி விதிப்புக்கு எதிராக அந்நாட்டு அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கனடா நாட்டை சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ, இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை இந்த புதிய வரி விதிப்பு நடைமுறை பாதிக்கும் என்றும், அமெரிக்க நுகர்வோருக்கு, அவர்கள் நாட்டில் இந்த வரி விதிப்பு பொருட்களின் விலை உயர்வு என்ற வடிவில் திரும்ப வரும் என்றும் கூறியுள்ளார். கனடா பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு 25% வரி விதிக்கும் முடிவை அறிவித்துள்ளது.
மெக்ஸிகோ :
மெக்ஸிகோவும், அமெரிக்காவின் புதிய 25% வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இதற்கு பதில் தரும் நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மெக்ஸிகோவின் பொருளாதார அமைச்சர், இந்த வரிகள் வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் (NAFTA) உள்ளடக்கத்திற்கு முரணாக உள்ளதாகவும், அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளை சிக்கலாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த வரி விதிப்புக்களுக்கு முன்னர் பேசிய மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம், அமெரிக்கா வரிவிதிப்பு குறித்து நேரடி வரி தாக்குதலில் தாங்கள் ஈடுபடப்போவதில்லை என்றும், அதனால ஏற்படும் பொருளாதார இழப்புகளை தாங்கள் சரி செய்து விடுவோம் என்றும் பேசியிருந்தார்.
ஐரோப்பிய ஒன்றியம் (EU) :
ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறுகையில் உலகளாவிய பொருளாதாரத்திற்கு டிரம்பின் இந்த முடிவு பெரும் சரிவை ஏற்படுத்தும் என்றும், ஐரோப்பிய ஒன்றியம் இந்த புதிய வரி விதிப்பு குறித்த எதிர் நடவடிக்கைகளுக்கு பதில் அளிக்க தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, இது வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளார்.
இந்தியா :
இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய வாரியால் இந்திய பொருளாதாரத்திற்கு பெரிய பின்னடைவு இல்லை என்றும், இந்த வரிவிதிப்பு தொடர்பாக மூத்த அரசு பொருளாதார வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்து :
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய வர்த்தக வரிகளை கையாள தாய்லாந்து ஒரு வலுவான திட்டத்தை கொண்டுள்ளது என்றும், வரி குறைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்றும் அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
தைவான் :
தைவான் அரசாங்கம் , அந்நாட்டு பொருட்களுக்கு அமெரிக்காவில் 32 சதவீத வரி விதிப்பு என்பது மிகவும் நியாயமற்றது என்றும் இது ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது என்றும் அந்நாட்டு அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் மிச்செல் லீ கூறினார். இந்த வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் தீவிர பேச்சுவார்த்தைகளை தைவான் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
ஆஸ்திரேலியா :
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த புதிய வரிவிதிப்பு நடைமுறை பற்றி கூறுகையில், தனது நட்பு நாடு மீது 10% வரியை விதிக்கும் முடிவு ஒரு நட்பு நாட்டின் செயல் அல்ல என்று கூறினார். ஆனால் அமெரிக்காவிற்கு எதிரான பரஸ்பர வரிகளை நாங்கள் இப்போது விதிக்க மாட்டோம் என்றும் கூறினார்.
ஜப்பான் :
ஜப்பான் மீதான அமெரிக்காவின் 24% வரி விதிப்பை நியாயமற்றது என்று கூறி, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்த உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஜப்பானிய வாகனங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலை உயர்வு அமெரிக்க நுகர்வோரை பாதிக்கும் என்று ஜப்பான் எச்சரித்துள்ளது.