டிரம்பின் தலைமையில், போரானது விரைவில் முடிவுக்கு வரும்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!
அதிபராக தேர்வாகியுள்ள டிரம்ப் போரை முடிவுக்கு கொண்டு வருவார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது என்பதற்காக ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய போன்ற நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவிகள் அளித்து வருவதால் உக்ரைனும் ரஷ்யாவை எதிர்த்து பதிலடி கொடுத்து வருகிறது.
இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக தற்போது வரை கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினால் உலகம் முழுவதும் உள்ள வணிகங்கள் ஸ்தம்பித்து வருகின்றது. இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர பல முறை இரு நாடுகளிடம் ஐ.நா பேச்சு வார்த்தை நடத்தியும் அது எடுபடவில்லை.
இப்படி இருந்து வருகையில், சமீபத்தில் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2-வது முறை தேர்வாகியுள்ளார். அவர் தேர்வான பிறகு உலக நாடுகளில் நடக்கும் போர்களை நான் தொடங்குவேன் என அவர்கள் கூறினார்கள். ஆனால், நான் போரைத் தொடங்கமாட்டேன், போரை முடிவுக்குக் கொண்டு வருவேன்’ எனப் பேசி இருந்தார்.
இது உலகம் முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்தது. தற்போது இந்த போர் நிறுத்தம் குறித்து டிரம்ப்பிடம் பேசியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் பேசுகையில், “எங்களுடைய நிலைப்பாட்டைப் பற்றி ட்ரம்ப் கேட்டறிந்தார். டிரம்பின் தலைமையின் கீழ், போரானது விரைவில் முடிவுக்கு வரும். விரைவான தீர்வு காண்பதில் முன்னுரிமை அளிப்போம் என ட்ரம்பின் நிர்வாகம் உறுதி கூறியுள்ளது. அமைதி வேண்டும் என்பதே எங்களுக்கு மிக முக்கியமான ஒன்றாகும்.
இதனால், எங்கள் மீது திணிக்கப்பட்ட அநீதியால், எங்களுடைய குடிமக்களை இழந்து வருகிறோம் என்ற உணர்வு ஏற்படாது. போர் நிச்சயமாக முடிவுக்கு வரும். ஆனால், அதற்கான சரியான தேதியைக் கூற முடியாது”, என அவர் பேசியிருந்தார்.