‘உக்ரைன் விவகாரத்தில் அமைதியான முறையிலே தீர்வு வேண்டும்’ ..புடினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்!
ரஷியா-உக்ரைன் விவகாரத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு நாங்கள் முழுமையான ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு இந்த ஆண்டு ரஷ்யாவில் உள்ள கசான் பகுதியில் நடைபெறுகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில் அந்நாட்டின் முக்கியத் தலைவர்கள் கலந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இன்று காலை பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் ரஷ்ய அதிபரான விளாதிமிர் புடினுடன் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார். அந்த பேச்சு வார்த்தையில், ரஷியா-உக்ரைன் விவகாரத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு இந்தியா ஆதரவு அளிக்க உள்ளது என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் விவகாரத்தில் உங்களுடன் நான் தொடர்பில் இருக்கேன். நான் முன்னர் கூறியது போலவே பிரச்சினைகள் அனைத்திற்கும் அமைதியான முறையில் மட்டுமே தீர்வு காணப்பட வேண்டும்.
அமைதியை ஏற்படுத்துவதற்கு நாங்கள் முழுமையான ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறோம். மனிதநேயத்திற்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்த பிரச்சினையில் அமைதி ஏற்படுவதற்கு இந்தியா தேவையான உதவிகளை வழங்கும்”, என பிரதமர் மோடி பேசி இருக்கிறார்.