ட்ரோன் தாக்குதல் : ரஷ்ய நாட்டின் எண்ணெய் கிணற்றில் பற்றி எரியும் தீ!
ரஷ்யா : உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ரஷ்ய நாட்டின் எண்ணெய்க் கிணறு கொழுந்து விட்டு எரிவதாக அந்நாட்டுச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2022 ஆண்டு பிப்ரவரி முதல் தற்போது வரையில் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் இடைவிடாமல் நடந்து வருகிறது. இதில் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டும் வருகிறது. ஆனாலும், இந்த போர் முடிவுக்கு கொண்டு வருவதற்கான எந்த ஒரு தீர்மானத்தையும் இரு நாடுகளும் இது வரை எடுத்ததாக தெரியவில்லை. ஆனால் போரின் தீவிரம் அவ்வப்போது குறைந்து கொண்டே வருகிறது.
அப்படி தீவிரம் சற்று குறைந்த போது தான் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உள்ள 1,263 சதுர கி.மீ. பரப்பளவைக் கைப்பற்றி இருந்தது. அப்போது மீண்டும் இரு நாடுகளுக்கிடையே போர் மீண்டும் தீவிரமடைந்தது. இந்தச் சூழலில் ஆகஸ்ட் கடந்த 26-ம் தேதி அன்று ரஷ்யாவின் சரடோவ் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு மீது அதிகாலை திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த மோசமான தாக்குதலில், சரடோவ் நகரில் உள்ள 38 மாடிகள் கொண்ட ‘வோல்கா ஸ்கை’ என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் 28-வது மாடியில், வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ட்ரோன் பயங்கர வேகத்தில் மோதி வெடித்துச் சிதறியது. இதன் விளைவாக அந்த தளம், அதற்குக் கீழே உள்ள தளம், மேலே உள்ள தளம் என 3 தளங்களும் பாதிப்புக்குள்ளானது. மேலும், இதில் ஒரு பெண் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்ததுடன், வீடுகளும் கடுமையாகச் சேதமடைந்தாக தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, நடந்த இந்த மோசமான ட்ரோன் தாக்குதலில் நேற்று ரஷியா நாட்டு எண்ணெய்க் கிணறு தாக்கட்டப்பட்டதால் அது கொழுந்துவிட்டு எரிவதாகவும் அந்நாட்டுத் தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பற்றி எரியும் அந்த எண்ணெய் கிடங்கு அணையாமல் எரிந்து வருவதாகவும், உக்ரைன் எல்லையிலிருந்து இந்தத் தாக்குதல் 1,500 கி.மீ.க்கும் தொலைவில் நடத்தப்பட்டுள்ளது’ எனவும் அந்நாட்டுச் செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் எண்ணெய்க் கிடங்குகள் மீதான இந்த உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்கள் ரஷ்யாவின் பெட்ரோலிய பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்துவதற்காக நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேலும், உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் இந்த ஆண்டு இதோடு 64-வது முறையாக உக்ரேனிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரியவந்துள்ளது.