பிரிட்டன் தேர்தல் : ரிஷி சுனக் கட்சி பெரும் தோல்வி.! மாபெரும் வெற்றிபெற்ற தொழிலாளர் கட்சி.!
UK தேர்தல்: ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 81 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. தொழிலாளர் கட்சி 360 இடங்களை வென்றுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் நேற்று (வியாழன்) 650 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிரதமருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கும், தொழிலாளர் கட்சி சார்பாக கீர் ஸ்டார்மரும் பிரதான பிரதமர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
நேற்று உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு ஆரம்பித்த தேர்தல் இரவு 10 மணிக்கு நிறைவடைந்தது. இதனை அடுத்து இன்று (வெள்ளி) உள்ளூர் நேரப்படி அதிகாலை முதலே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 650 இடங்கள் கொண்ட பிரிட்டன் தொகுதிகளில் பெரும்பான்மை நிரூபிக்க ஒரு கட்சிக்கு 326 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
இதுவரை வெளியான வாக்கு எண்ணிக்கை நிலவரம் அடிப்படையில் ஆரம்பம் முதலே தொழிலாளர் கட்சி முன்னிலை பெற்று வருகிறது. சுமார் 14 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்து வந்த கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி காலம் நிறைவு பெரும் தருவாயில் உள்ளது.
தற்போது வரையில் 360 இடங்களில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 81 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. மற்ற கட்சிகளான ஸ்காட்டிஷ் தேசியவாத கட்சி (SNP) 3 இடங்களிலும், Liberal Democrats 49 இடங்களிலும், சீர்திருத்த UK கட்சியினர் 3 இடங்களிலும் தங்கள் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.
அந்நாட்டு ஊடகங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்படி, சுமார் 410 இடங்களை வென்று தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்றும், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 131 இடங்களில் மட்டுமே வெற்றியை பதிவு செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.