பாகிஸ்தான் பொதுமக்களுக்கு ராணுவ தண்டனை! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு!
பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் 25 பொதுமக்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதற்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
கராச்சி : பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு அவர் சிறையில் இருக்கிறார். அவரை விடுவிக்க வேண்டும் என அந்நாட்டில் அவரது ஆதரவாளர்கள் முதல் பன்னாட்டு அரசியல் தலைவர்கள் பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கடந்த 2023, மே 9ஆம் தேதியன்று, இம்ரான் கானை விடுவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவரை கைது செய்த பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அவரது ஆதரவளர்கள் பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் வீட்டை முற்றுகையிட்டு சேதப்படுத்தினர். இந்த கலவரத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. உலக நாடுகளில் ராணுவ நீதிமன்றம் என்பது சர்வதேச போர் குற்றங்களை விசாரணை செய்யவும், ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவும் செயல்பட்டு வருகிறது. அங்கு பொதுமக்கள் மீதான குற்ற விசாரணை நடைபெறாது. ஆனால், பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் 25 பாகிஸ்தான் பொதுமக்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டது. அவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு சர்வதேச நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கூறுகையில், பாகிஸ்தான் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, நியாயமான விசாரணை மற்றும் மக்களுக்கான உரிமையை மதிக்குமாறும் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. பாகிஸ்தான் நீதித்துறை சுதந்திரமானது, வெளிப்படைத்தன்மை இல்லாமலும், நடைமுறை உத்தரவாதங்கள் இல்லாமலும் உள்ளன என கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அரசு இது பற்றி கூறுகையில், இராணுவ நீதிமன்றங்களில் பொதுமக்களை விசாரணைக்கு உட்படுத்துவது நீதித்துறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமான விசாரணைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என அதிருப்தி தெரிவித்துள்ளது.