துருக்கி ஹோட்டல் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
வடமேற்கு துருக்கியில் உள்ள பிரபலமான ஸ்கை ரிசார்ட்டில் உள்ள 12 மாடி ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை76 ஆக உயிர்ந்துள்ளது.
போலு : துருக்கி ஹோட்டலில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76ஆக அதிகரித்துள்ளது. இஸ்தான்புல்லுக்கு கிழக்கே சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போலு மாகாணத்தின் கொரோக்லு மலைப்பகுதியில் உள்ள கர்தல்காயாவில் உள்ள ஸ்கை ஹோட்டலில் இந்த தீ விபத்து நடந்துள்ளது.
நேற்று அதிகாலை 3:27 மணிக்கு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு தங்கியிருந்தோர் பலர் உடல் கருகி உயிரிழந்தனர். தீ விபத்து ஏற்பட்டதும் அதிகாலை 4:15 மணிக்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கத் தொடங்கினர்.
இதில், 66 பேர் உயிரிழந்ததாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அது 76ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களில் 76 பேரில் 45 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மற்றையவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தீ விபத்தில் குறைந்தது 51 பேர் காயமடைந்தனர்.