3-வது முறையாக டிரம்பை கொல்ல முயற்சி! துப்பாக்கியுடன் வந்த நபர் அதிரடி கைது!
கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த டிரம்பை கொலை செய்யும் நோக்கத்துடன் போலி பாஸில் துப்பாக்கியுடன் வந்த நபரை காவல்துறை கைது செய்துள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் -5 ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக இரு கட்சியினரும் செய்து வருகின்றனர். இதில், ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிடும் கமலா ஹாரிஸின் கை ஓங்கி இருப்பதாகவும், அடுத்த அமெரிக்க அதிபர் அவர் தான் எனவும் கருத்துக் கணிப்புகளில் கூறப்படுகிறது.
இந்த வேளையில், அமெரிக்கா முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்பை 3-வது முறையாக கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இன்று கோசெல்லாவில் நடந்த கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்ற நிலையில் அவர் மீது இந்த 3-வது முறையாக இப்படி கொலைமுயற்சி நடந்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த, ஜூலை 13ம் தேதி நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்றபோது, அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியதோடு சிறிதாக காதில் மட்டும் காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2-வது முறையாக கடந்த செப்டம்பர் மாதம் புளோரிடாவில் உள்ள வெஸ்ட் பாம் பீச் பகுதியில் உள்ள தன் கோல்ப் கிளப்பில் டிரம்ப் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த காம்பவுண்ட் சுவர் அருகே, டிரம்பை குறிவைத்து துப்பாக்கியால் ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டார். அதிலும், அவர் உயிர் தப்பி இருந்தார். மேலும், அந்த நபர் சுட்டதை கவனித்த ரகசிய போலீஸ் ரயான் வெஸ்லே ரோத் எனும் 58 வயதுடைய நபரை கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து தற்போது 3-வது முறையாக, கோசெல்லாவில் நடந்த கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்ற நிலையில், அந்த கூட்டத்தில் போலி பாஸ் மற்றும் துப்பாக்கியுடன் வந்த 49 வயதான நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில், கைதான அவர் பெயர் வெம் மில்லர் என தெரிவித்துள்ளார்.
மேலும், கைதான நபர் வலதுசாரி அரசாங்க எதிர்ப்புக் குழுவில், முக்கிய நபராக இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதனால், கைதான நபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 3-வது முறையாக கொலை முயற்சி தாக்குதல் நடைபெற்று உள்ளதால் அந்த இடத்தையும் சுற்றிலும் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.