Trump Vs Kamala: பரபரக்கும் இறுதிக்கட்ட பரப்புரை.. அடுத்த அமெரிக்க அதிபர் யார்? கருத்துக் கணிப்பு
யாருக்கு வெற்றிவாய்ப்பு என்பது பற்றி தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் (opinion poll) வெளியாகி உள்ளன.
அமெரிக்கா : நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது நாளை நடைபெற இருக்கிறது. அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் வாக்குச்சீட்டு மூலம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்திய நேரப்படி நாளை மாலை 4:30 மணிக்கு தேர்தல் தொடங்குகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸும், டொனால்ட் டிரம்பும் தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரமாக நடத்தி வருகின்றனர். அதிலும், இழுபறி நிலவும் சில மாநிலங்களில் இறுதிக்கட்ட பரப்புரையில் கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கருத்துக் கணிப்புகளால் சொல்ல முடியாது. ஆனால், யாருக்கு வெற்றிவாய்ப்பு என்பது பற்றி தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் (opinion poll) வெளியாகி உள்ளன.
அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக, கருத்துக் கணிப்புகளில் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் சமநிலையிலேயே உள்ளனர். இது தேர்தலுக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
நியூயார்க் டைம்ஸ் மற்றும் சியன்னா கல்லூரியின் இறுதிக் கருத்துக்கணிப்பின்படி, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், நாட்டின் ஏழு போர்க்கள மாநிலங்களில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
எனினும், நெவாடா, வட கரோலினா மற்றும் விஸ்கான்சினில் கமலா ஹாரிஸ் ஓரளவு முன்னிலை பெற்றுள்ளதாகவும், அரிசோனாவில் முன்னாள் அதிபர் டிரம்ப் முன்னிலையில் இருப்பதாகவும் கருத்துக்கணிப்பு காட்டுகிறது.
இந்தியா டுடே-யின்படி, ஆரம்பத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு அதிக ஆதரவு இருந்தாலும், தேர்தல் நெருங்க நெருங்க டிரம்புக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. மொத்தத்தில் இந்த தேர்தலில் போட்டி கடுமையாக உள்ளது.
எது என்னவோ…. அமெரிக்க மக்களின் தீர்ப்பு நவ.06-ல் தெரிந்துவிடும். இந்த தேர்தலில், அமெரிக்க ஜனத்தொகையில் சுமார் 16 கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதியுடன் தயாராக உள்ளனர். அதில், 7 கோடிக்கும் மேல் உள்ளவர்கள் தங்களது வாக்கைச் செலுத்தி விட்டனர், மீதம் உள்ள மக்கள் நாளை வாக்களிக்க உள்ளனர்.