டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!
இந்த தாக்குதல்கள் ஏமனில் பதற்றத்தை அதிகரித்துள்ளதோடு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் மோதல்களை தூண்டலாம் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின்படி, கடந்த மார்ச் 15-ம் தேதி முதல் தொடங்கிய இந்த தாக்குதல்கள், செங்கடலில் கப்பல் போக்குவரத்தை தாக்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பை குறிவைத்து நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதல்களில் அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படையைப் பயன்படுத்தி, ஹவுதிகளின் ரேடார்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தளங்கள் அழிக்கப்பட்டன. சனா, சாடா, அல் பய்டா உள்ளிட்ட ஏமனின் பல முக்கிய பகுதிகளில் நடந்த இந்த தாக்குதல்களில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 101 பேர் காயமடைந்ததாகவும் ஹவுதி ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஹவுதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ட்ரம்ப் இந்த தாக்குதலை “ஹவுதி பயங்கரவாதிகளின் கடற்கொள்ளை மற்றும் தாக்குதல்களுக்கு எதிரான தீர்க்கமான பதிலடி” என்றுகூறியதோடு, ஈரானை நோக்கி “ஹவுதிகளுக்கு ஆதரவை உடனடியாக நிறுத்த வேண்டும், இல்லையெனில் அமெரிக்கா முழு பொறுப்பை ஏற்கும்” என்று எச்சரித்துள்ளார்.
செங்கடல் வழியாக சர்வதேச கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பதற்காகவும், ஹவுதிகளின் தாக்குதல்களை தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் (CENTCOM) தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹவுதி அமைப்பு இந்த தாக்குதலை”போர் குற்றம்” என்று சாடியுள்ளது. மேலும், இந்த தாக்குதலுக்கு பதிலடியாக எதிர் நடவடிக்கை எடுப்போம் என்று அறிவித்துள்ளனர். இந்த தாக்குதல்கள் ஏமனில் பதற்றத்தை அதிகரித்துள்ளதோடு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் மோதல்களை தூண்டலாம் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.