வர்த்தகப் போரை தொடங்கிவிட்ட டிரம்ப்! பதிலடி கொடுக்க உலக நாடுகள் திட்டம்?

டோனால்ட் டிரம்ப் புதிய வரி உத்தரவுகளை அறிவித்திருக்கும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம், சீனா அதற்கு பதிலடி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

tariffs trump

அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை அறிவித்திருக்கிறார்.  அவருடைய இந்த திடீர் அறிவிப்பு உலகளாவிய வர்த்தகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஏப்ரல் 3, 2025 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி, இந்தியாவுக்கு 26% சுங்கவரியும், சீனாவுக்கு 34% சுங்கவரியும் விதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புதிய வர்த்தகப் போரின் தொடக்கமாகவும் பார்க்கப்படுகிறது.

எந்தெந்த நாடுகளுக்கு அவர் எவ்வளவு வரி விதித்துள்ளார்? இதற்கு பதில் நடவடிக்கையாக அந்த நாடுகள் என்னென்ன முடிவுகள் எடுக்கப்படவிருக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.

சீனா – 34%

சீனா அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக போட்டியாளராக உள்ளது. 2024 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு $427 பில்லியன் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த சூழலில், அமேரிக்கா 34% வரி விதித்த காரணத்தால் மின்னணு பொருட்கள், இயந்திரங்கள், நுகர்வோர் பொருட்கள் போன்றவை பாதிக்கப்படும். சீனாவின் பொருளாதாரம் ஏற்கனவே சற்று மந்தமாக உள்ள நிலையில், இது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா அமெரிக்க பொருட்களுக்கு பதிலடி சுங்கவரியை விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி சீனா பதிலடி கொடுத்தது என்றால் இது வர்த்தகப் போரை தீவிரப்படுத்தும். ஏற்கனவே,, டிரம்ப் (2018-2019), ஆகிய ஆண்டுகளில் ஆட்சியில் இருந்தபோது சீன பொருட்களுக்கு 25% சுங்கவரி விதித்தபோது, சீனா உடனடியாக அமெரிக்க விவசாய பொருட்கள் (சோயாபீன்ஸ்), வாகனங்கள், மற்றும் எரிசக்தி பொருட்களுக்கு பதிலடி சுங்கவரிகளை விதித்தது. எனவே, இப்போது மீண்டும் வரி விதிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

இந்தியா – 26%

இந்தியா அமெரிக்காவிற்கு வாகனங்கள், மருந்துகள், மின்னணு பொருட்கள், பின்னலாடைகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு இந்தியா 52% சராசரி சுங்கவரி விதிப்பதை டிரம்ப் நாங்கள் பதிலுக்கு 26 % வரி விதிக்கிறோம் என அறிவித்திருந்தார். இதன் காரணமாக, இந்தியாவின் ஏற்றுமதி 3-5% குறையலாம். வாகனத் துறை (டாடா மோட்டார்ஸ்), மருந்து (சன் பார்மா), மற்றும் ஐடி சேவைகள் பாதிக்கப்படலாம். இதன் காரணமாக இதனை தீர்க்கவேண்டும் என்றால் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் (EU) – 20%

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவின் முக்கிய வர்த்தக பங்காளியாக உள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகள் வாகனங்கள், மருந்துகள், ஆடம்பர பொருட்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கின்றன. எனவே, 20% வரி என்பது மிதமானது என்றாலும், வாகனத் துறை (BMW, Volkswagen) மற்றும் ஒயின், சீஸ் போன்ற தயாரிப்புகள் பாதிக்கப்படலாம். EU-வின் உள்நாட்டு உற்பத்தி-யில் 0.2% குறைவு ஏற்படலாம்.

EU ஏற்கனவே அமெரிக்காவின் எஃகு, அலுமினிய சுங்கவரிகளுக்கு பதிலடியாக நடவடிக்கை எடுத்ததது. நீங்கள் வரி விதித்தால் நாங்களும் விதைப்போம் என கூறியிருந்தது. அதன்பிறகு பேச்சுவார்த்தை நடந்து சமூகமாக முடிக்கப்பட்டது. எனவே, இப்போது மீண்டும் அமெரிக்கா வரிவிதித்த காரணத்தால் பதிலடி தர வாய்ப்புள்ளது.

தென் கொரியா – 25%

தென் கொரியா அமெரிக்காவிற்கு மின்னணு பொருட்கள் (சாம்சங், LG), வாகனங்கள் (ஹூண்டாய், கியா) மற்றும் எஃகு ஏற்றுமதி செய்கிறது. இப்போது 25% வரி விதித்த காரணத்தால் தென் கொரியாவின் ஏற்றுமதி 2-4% குறையலாம். குறிப்பாக மின்னணு மற்றும் வாகனத் துறைகள் பாதிக்கப்படும். மேலும், தென் கொரியா அமெரிக்காவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (KORUS FTA) கொண்டுள்ளதால், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி செய்ய வாய்ப்பு இருக்கிறது.

தைவான் – 32% & ஜப்பான் – 24%

அமெரிக்கா தைவான் நாட்டிற்கு 32% வரி விதித்ததற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு சுங்கவரி விதித்தால், அது அமெரிக்காவுடனான உறவை பாதிக்கலாம். இதன் காரணமாக தைவான் பேச்சுவார்த்தை தான் நடக்கும். அது மட்டுமின்றி, தைவான் சீனாவிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள அமெரிக்காவின் இராணுவ ஆதரவை பெரிதும் சார்ந்துள்ளது. அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் தைவானுக்கு முக்கியம் என்பதால் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புகள் உள்ளது.

அதைபோல சீனாவும் ஜப்பான் அமெரிக்காவுடன் ஒரு வலுவான பாதுகாப்பு ஒப்பந்தம் (U.S.-Japan Security Treaty) கொண்டுள்ளது. வடகொரியா மற்றும் சீனாவிலிருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவு ஜப்பானுக்கு அவசியம் எனவே இதனை உணர்ந்து நிச்சியம் பேச்சுவார்த்தை தான் நடத்தும்.

மேலும், அதைப்போலவே, கம்போடியா 49%, வியட்நாம் 46%, இலங்கை 44% ஆகியவற்றுக்கும் அமெரிக்க வரிவிதித்துள்ளது. சீனாவை விட இந்த நாடுகளுக்கு தான் அதிகமான வரி விதித்துள்ளது. ஆனால், இந்த நாடுகள் இதற்கு பதிலடி கொடுக்க வாய்ப்புகள் இல்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்