“போர் வேண்டாம்”.. புடினை போன் காலில் அழைத்த டிரம்ப்.! முடிவுக்கு வரும் உக்ரைன் போர்?
ரஷ்ய அதிபர் உடனான பேச்சுவார்த்தையின் போது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
வாஷிங்டன் :அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். அந்த உரையாடலில் உக்ரைனில் மீண்டும் போர் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாமென டிரம்ப் கேட்டுக்கொண்டார்.
கடந்த பிப்ரவரி 2022 ஆண்டு முதல் தொடங்கிய ரஷ்யா-உக்ரைன் போர், இன்னும் ஓயாமல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த போரில், ரஷ்யா உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றிது குறிப்பிடத்தக்கது. இதனால், பல நாடுகள் இந்த இரு நாடுகளுக்குயிடையே போர் நிறுத்தம் குறித்த பேச்சு வார்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் “நான் ஆட்சிக்கு வந்தால் ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவேன்” என்று டிரம்ப் கூறியிருந்த நிலையில், புடினிடம் டிரம்ப் பேசியிருக்கிறார். மேலும் இந்த அழைப்பின் போது, டொனால்ட் டிரம்ப், ஐரோப்பாவில் வலுவான அமெரிக்க இராணுவப் இருப்பையும் புடினுக்கு நினைவூட்டியதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மாஸ்கோவுடன் எதிர்கால பேச்சுவார்த்தைகளில் ஈடுபட விருப்பம் உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு, இருவருக்கும் இடையே நடந்த முதல் தொலைபேசி உரையாடல் இதுவாகும். இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தை குறித்து இரு நாடுகளிடம் இருந்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
ஆனால், புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ ரிசார்ட்டில் இருந்து டிரம்ப் இந்த உரையாடலை நடத்தியதாக வாஷிங்டன் போஸ்ட் அறிக்கை கூறுகிறது. முன்னதாக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் டிரம்ப் நடத்திய உரையாடலைத் தொடர்ந்து இந்த தொலைபேசி உரையாடல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி அன்று அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ளார். அதற்கு முன்னதாக, இரு நாட்டு தலைவர்களிடமும் போர் நிறுத்தம் குறித்து ஆலோசனை நடத்தி இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு நாட்டின் இடையேயான போர் நிறுத்தப்படுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.