17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

பாகிஸ்தானில் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட ரயிலில் 180க்கும் மேற்பட்டோர் பணயக்கைதிகளாக சிக்கியுள்ளதாகவும், பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்தை நெருங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

BLA

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) கடத்தியதாக அந்நாட்டு அரசு செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ரிண்ட் தகவல் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் எல்லைக்குள், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே அமைத்துள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் செயல்படும் BLA கிளர்ச்சியாளர்கள், பலுசிஸ்தான் மாகாணத்தை தனியாக பிரிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த BLA அமைப்பை பாகிஸ்தான் அரசு தடை செய்த அமைப்பாக முன்னரே அறிவித்துள்ளது.

BLA கடத்திய பயணிகள் ரயிலில் மொத்தம் 9 பெட்டிகள் உள்ளன என்றும், அதில் மொத்தமாக சுமார் 500 பயணிகள் உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்களில் 20 பேரை BLA கிளர்ச்சியாளர்கள் கொன்றதாகவும், ஒரு ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மொத்தம் 180 பேர் பணய கைதிகளாக பிடிபட்டுள்ளதாகவும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்தவர்கள் மட்டும் பிணையில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் ராணுவம் தங்களை தாக்க முற்பட்டால் பயணிகளை கொன்று விடுவோம் என BLA கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பாக். ரயில்வே கட்டுப்பாட்டாளர் முகமது காஷிஃப் கூறுகையில், சுரங்கப்பாதை எண் 8-ல் ஆயுதம் ஏந்திய BLA கிளர்ச்சியாளர்களால் ரயில் தடுத்து நிறுத்தப்பட்டது என்றும் இந்த ரயில் பாதையில் மொத்தம் 17 சுரங்கப்பாதைகள் உள்ளன என்றும், சுரங்கப்பாதை கடினமான நிலப்பரப்பில் உள்ளதால் ரயிலின் வேகம் பெரும்பாலும் மெதுவாக இருக்கும் என்றும் அவர் கூறினார். குடலார் மற்றும் பிரு கோனேரி பகுதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது ரயில் கடத்தப்பட்ட பகுதிக்கு மீட்புக் குழுவினரும் பாதுகாப்புப் படையினரும் சென்றுள்ளனர் என்றும், மேலும், தாக்குதல் நடத்தியவர்களை தேடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. ரயில் கடத்தல் காரணமாக உள்ளூர் மருத்துவமனைகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு அவசர சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்