வரலாற்றில் இன்று..! உலகத் தொழிலாளர்களின் சிறப்புமிக்க போராட்டங்களை நினைவுபடுத்தும் மே தினம்..!
உலகம் முழுவதும் தொழிலாளர்களின் ஒற்றுமையை நினைவுபடுத்தும் மே தினம் அனைவராலும் இன்று அனுசரிக்கப்படுகிறது.
உலக அளவில் ஆண்டுதோறும், மே 1ம் தேதியான இன்று மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் அனைவராலும் அனுசரிக்கப்படுகிறது. மே தினம், தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் இயக்கம் செய்த வரலாற்று சிறப்புமிக்க போராட்டங்கள் மற்றும் உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை நினைவுகூரும் விதமாகவும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
தொழிலாளர்கள் போராட்டம்:
பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரம் கட்டாயம் வேலை செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆனால், 1884-ல் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தினர்.
அமெரிக்காவின் கறுப்பு தினம் :
அமெரிக்காவில் கடந்த 1887ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். இதையடுத்து, நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இந்த நாள் அமெரிக்காவின் கறுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், பல தியாகிகளின் தியாகமும்தான் இன்று மே தினம் என்னும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் தொழிலாளர் தினம்:
இந்தியாவில் 1923-ஆம் ஆண்டில் முதல்முதலாக சென்னை மெரீனா கடற்கரை மற்றும் திருவான்மியூர் பகுதிகளில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்திய விடுதலைப் போராளியும், சிந்தனைச் சிற்பி என்று அழைக்கப்படும் ம.சிங்காரவேலர் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள மெரினா கடற்கரையில், இந்தியாவின் முதல் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து திருவான்மியூர் கூட்டத்தில், சுப்பிரமணிய சிவா மற்றும் எம்.பி.எஸ்.வேலாயுதம் தலைமையில் இந்தியாவின் முதல் மே தினம் கொண்டாடப்பட்டது.