எதிர்காலத்தில் கொரோனா வராமல் தடுக்க, நோயின் மூலாதாரத்தைக் கண்டறிய வேண்டும்- WHO தலைவர்.!
எதிர்காலத்தில் கொரோனா பரவல் மீண்டும் வராமல் தடுக்க, நோயின் மூலாதாரத்தைக் கண்டறிவது கட்டாயம் என்று உலக சுகாதார தலைவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல தாக்கங்களை ஏற்படுத்தி மில்லியன் கணக்கான உயிர்களை பலி வாங்கியது. கொரோனாவின் புதுப்புது வைரஸ்கள் உருமாற்றம் அடைந்து வருவது மக்களை மேலும் பீதியில் ஆழ்த்துகிறது.
இந்த நிலையில் கோவிட்-19 இன் தோற்றத்தைக் கண்டுபிடிப்பது அறிவியல் மற்றும் தார்மீக ரீதியில் கட்டாயமாகிறது என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துளளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் கொரோனா நோயால் பல உயிர்கள் பலியாகியுள்ளதாகவும், நீண்ட கால கொரோனா தொற்று உட்பட பல மக்கள் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் ஏற்பட்ட கசிவால் வெளிவந்திருக்கலாம் என்று அமெரிக்க ஏஜென்சி தகவல் வெளியிட்ட ஒருவாரத்திற்கு பிறகு கெப்ரேயஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த கொடிய கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பதற்கான பதில்களைக் கொண்டு வர ஐநா அமைப்பின் மீது இது மேலும் அழுத்தத்தை அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸின் முதல் தொற்று பதிவான, சீனாவில் வுஹான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் WHO தலைமையிலான குழு 2021 இல் ஆய்வினை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.