டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடிப்பு..! ஓசன்கேட் தலைமையகம் காலவரையின்றி மூடல்..!
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடிப்பு தொடர்பாக, ஓசன்கேட் நிறுவனத்தின் தலைமையகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
பல வருடங்களுக்கு முன்பு கடலுக்கடியில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை சுற்றிப்பார்க்க, அமெரிக்காவின் ஓசன்கேட் நிறுவனம் டைட்டன் என்ற நீர்மூழ்கிக் கப்பல் பயணம் ஒன்றை ஏற்பாடு செய்தது.
இந்த பயணத்தில் பிரிட்டிஷ் நாட்டவரான ஹமிஷ் ஹார்டிங், பாகிஸ்தானை சேர்ந்த ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான், ஓசன்கேட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான பைலட் ஸ்டாக்டன் ரஷ் மற்றும் பிரெஞ்சு ஆய்வாளர் மற்றும் நிபுணரான பால்-ஹென்றி நர்கோலெட் ஆகியோர் பயணம் செய்தனர்.
ஜூன் 18ம் தேதி அன்று பயணத்தைத் தொடங்கிய 1 மணிநேரம் 45 நிமிடங்களில், நீர்மூழ்கிக் கப்பலின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் 5 பேரையும் தேடும் பணியில் அமெரிக்க கடலோரக்காவல்படை தீவிரமாக ஈடுபட்டது. குறிப்பாக, டைட்டனில் இருந்து வரும் எந்த ஒலியையும் கேட்கும் சோனார் மிதவைகளும் தேடுதலுக்கு பயன்படுத்தப்பட்டன.
அந்த தேடுதலின்போது கடலுக்கடியில் நீர்மூழ்கிக்கப்பலின் சில நொறுங்கிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, டைட்டனில் பயணம் செய்த 5 பேரும் இறந்துவிட்டனர் என்றும் டைட்டன் நீர்மூழ்கிக்கப்பல் ஒரு பெரிய வெடிப்புக்கு உள்ளாகியதாகவும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வாஷிங்டன் மாநிலத்தின் எவரெட்டில் உள்ள ஓசன்கேட் நிறுவனத்தின் தலைமையகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இதற்கிடையில், கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் வெடிப்பு குறித்து விசாரணையை தொடங்கியுள்ளது. அமெரிக்க கடலோர காவல்படை இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் என்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் கூறியுள்ளது.