இந்த பொருளில் கழிப்பறை இருக்கையில் இருப்பதைவிட 40,000 மடங்கு அதிக பாக்டீரியாக்கள் உள்ளதாம்..!
மறுமுறை பயன்படுத்தப்படும் தண்ணீர் பாட்டில்கல் கழிப்பறை இருக்கையை விட 40,000 மடங்கு அதிகமான பாக்டீரியாக்களை தங்கவைக்கும் என ஆய்வில் தகவல்.
நாம் மீண்டும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாட்டில்கள் கழிப்பறை இருக்கையை விட 40,000 மடங்கு அதிகமான பாக்டீரியாக்களை தங்கவைக்கும் என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
ஆய்வில் வெளியான தகவல்
அமெரிக்காவில் உள்ள waterfilterguru.com- ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, தண்ணீர் பாட்டில்களின் பல்வேறு பகுதிகளைச் சேகரித்து ஆய்வை மேற்கொண்டது. தண்ணீர் பாட்டில்களில் பல வகையான மூடிகளைக் கொண்ட (Spout lid, Screw-top lid, Stray lid and Squeeze-top lid) பாட்டில்கள் ஒவ்வொன்றையும் மூன்று முறை பரிசோதித்ததில், கிராம் நெகட்டிவ் ரோட்ஸ் மற்றும் பேசிலஸ் என்ற இரண்டு வகையான பாக்டீரியாக்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
தண்ணீர் பாட்டில்களில் பாக்டீரியாக்கள்
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், மறுமுறை பயன்படுத்தப்படும் தண்ணீர் பாட்டில்களில், கிச்சன் சிங்க்கை விட இரண்டு மடங்கு கிருமிகளும், கம்ப்யூட்டர் மவுஸை விட நான்கு மடங்கு பாக்டீரியாக்களும், செல்லப் பிராணிகள் குடிக்கும் கிண்ணத்தைவிட 14 மடங்கு பாக்டீரியாக்களும் அதிகம் இருக்கின்றன என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பாக்டீரியா கிருமிகள் நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தும். இரைப்பை குடல் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்றும், ய்வு செய்யப்பட்ட மற்ற தண்ணீர் பாட்டில்களை ஒப்பிடுகையில், ஸ்குவீஸ் டாப் பாட்டில்கள் தூய்மையானவை என்றும், நாம் மீண்டும், மீண்டும் பயன்படுத்தும் பாட்டில்களை ஒரு நாளைக்கு ஒருமுறையாவது, சூடான சோப்பு நீரில் கழுவ வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
இது ஆபத்தானது அல்ல
இந்த பாட்டில்கள் அதிக எண்ணிக்கையிலான பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருந்தாலும், அது ஆபத்தானது அல்ல என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியலாளர் டாக்டர் சைமன் கிளார்க் கூறியுள்ளார்.
தண்ணீர் பாட்டிலில் இருந்து ஒருவர் நோய்வாய்ப்பட்டதாக நான் கேள்விப்பட்டதே இல்லை. அதேபோல், குழாய்களும் ஒரு பிரச்சனையல்ல. குழாயிலிருந்து ஒரு கிளாஸ் தண்ணீரை ஊற்றுவதால் ஒருவர் நோய்வாய்ப்பட்டதாக நீங்கள் கடைசியாக எப்போது கேள்விப்பட்டீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.