ஓமிக்கிரான் புதிய வகை தீவிரமானது என தரவுகள் எதுவும் இல்லை .! WHO தலைமை விஞ்ஞானி தகவல்.!
தற்போது வரை ஓமிக்கிரான் வைரஸின் XBB எனும் துணை வகை புதிய வைரஸ் வகைகள் மருத்துவ ரீதியாக தீவிரமானவை என பரிந்துரைக்க எந்த நாட்டிலிருந்தும் தரவுகள் வெளிவரவில்லை என WHO-ன் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன்தெளிவுபடுத்தினார்.
உலக சுகாதார அமைப்பான WHO-ன் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் கடந்த வியாழகிழமை அன்று ஓமிக்கிரான் புதிய வகை பற்றி புதிய தகவல்களை பதிவிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், உலகின் சில நாடுகளில் COVID-19 வைரஸின் புதிய மாறுபாடான ஓமிக்கிரான் வைரஸின் XBB எனும் துணை வகை வைரஸ் தொற்று உருவாக கூடும் என கூறியுள்ளார். இந்த புதிய வைரஸ் வகை மாறுபாடுகள் மருத்துவ ரீதியில் கடுமையானவை என்று எந்த நாட்டிலிருந்தும் தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
ஓமிக்கிரான் வைரஸின் 300-க்கும் மேற்பட்ட துணை வகைகள் உள்ளன. தற்போது கண்டறியப்பட்டது XBB எனும் புதிய வகையாகும். இது நோயெதிர்ப்பு சக்தியை சோதிக்க கூடியது. அதாவது இது ஆன்டிபாடிகளை வெல்லும். புதிய வகை எக்ஸ்பிபி வைரஸ் காரணமாக சில நாடுகளில் தொற்றுநோய்களின் மற்றொரு அலை ஏற்பட கூடும் என்று அவர் கூறினார்.
அதே போல மற்ற ஓமிக்கிரான் வழித்தோன்றல்களையும் மருத்துவக்குழு கண்காணித்து வருவதாக WHO விஞ்ஞானி சுவாமிநாதன் கூறினார். தற்போது வரை இந்த புதிய வைரஸ் வகைகள் மருத்துவ ரீதியாக தீவிரமானவை என பரிந்துரைக்க எந்த நாட்டிலிருந்தும் தரவுகள் வெளிவரவில்லை என அவர் தெளிவுபடுத்தினார்.
வைரஸ் தொற்று காரணமாக உலகளவில் ஒவ்வொரு வாரமும் 8,000 முதல் 9,000 இறப்புகள் பதிவாகி வருகின்றன. எனவே கொரோனா தொற்று முடிந்துவிட்டது என்று நாங்கள் கூறவில்லை. அனைத்து முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நல்ல விஷயம் என்னவென்றால், நம்மிடம் இப்போது தொற்றுக்களை கட்டுப்படுத்த போதிய உபகரணங்கள் உள்ளன மற்றும் தடுப்பூசிகள் போதிய அளவில் இருக்கிறது ஆதலால் பயப்பட தேவையில்லை எனவும் டாக்டர் சௌமியா சுவாமிநாதன் கூறினார்.