உணவு, எரிபொருள், உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது’ – ஜி20 மாநாட்டில் மோடி பேச்சு!
சர்வதேச அரங்கில் தெற்கு நாடுகளின் பிரதிநிதியாக இந்தியா செயல்படுகிறது என ஜி20 மாநாட்டில் பேசிய போது மோடி தெரிவித்துள்ளார்.
ரியோ டி ஜெனிரோ : கடந்த 16-ம் தேதி 5 நாட்களாக அரசு முறை பயணமாக பிரதமர் மோடி டெல்லியிலிருந்து புறப்பட்டார். முதலில் நைஜீரியாவின் தலைநகர் அபுஜா சென்ற அவர் அதனைத் தொடர்ந்து, ஜி20 உச்சி மாநாட்டிற்கு பங்கேற்பதற்காக பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகருக்கு சென்றார்.
அங்கு பிரேசிலுக்கான இந்திய தூதர் சுரேஷ் ரெட்டி மற்றும் இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு, நேற்று உச்சி மாநாடு தொடங்கியது. இதில், நேற்று வறுமையை ஒழிப்பது குறித்து விரிவாக விவாதம் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மாலையில், ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் பிறகு பிரதமர் மோடி உச்சி மாநாட்டில் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், “கடந்த ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா நடத்தியபோது ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கருப்பொருளை முன்வைத்தோம். இந்த கருப்பொருள் தற்போதைய ஜி20 உச்சி மாநாட்டுக்கும் பொருந்தும்.
உலக அரங்கில் தெற்கு நாடுகளின் பிரதிநிதியாக இந்தியா நாடு செயல்படுகிறது. அதன்படி, கடந்த உச்சி மாநாட்டில் ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 அமைப்பில் அதிகாரப் பூர்வமாக இணைக்கப்பட்டது. பல்வேறு நாடுகளிடையே நீண்ட காலமாக நீடிக்கும் போர்கள் மற்றும் போர் பதற்றத்தால் தெற்கு நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
குறிப்பாக உணவு, எரிபொருள், உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. தற்போதைய ஜி20 உச்சி மாநாட்டை நடத்தும் பிரேசில், வறுமைக்கு எதிராக சர்வதேச நாடுகள் ஓரணியாக செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. இந்த கருத்தை இந்தியா ஆதரிக்கிறது”, என பிரதமர் மோடி பேசியுள்ளார்.