சீனாவில் உலகின் மிகப்பெரிய வின்ட் டர்பைன்..! ஒரு வருடத்திற்கு 36,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் என உறுதி..!
உலகின் மிகப்பெரிய வின்ட் டர்பைனை சீனா இயக்கத் தொடங்கியுள்ளது. இந்த காற்றாலையானது ஜூலை 19 அன்று ஃபுஜியான் மாகாணத்திற்கு அருகிலுள்ள நிறுவனத்தின் கடலோர காற்றாலை பகுதியில் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளதாக சீனா த்ரீ கோர்ஜஸ் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
இந்த MySE-16-260 என்ற வின்ட் டர்பைன் 16 மெகாவாட் திறன் கொண்டது. இந்த மெகா டர்பைன் 152 மீட்டர் உயரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு கால்பந்து மைதானத்தின் நீளத்தை விட இரண்டு மடங்கு நீளம் கொண்டுள்ளது. இதில் இருக்கும் ஒவ்வொரு பிளேடும் 123 மீட்டர்கள் மற்றும் 54 டன் எடை கொண்டது.
ரோட்டரின் ஸ்வீப் 50,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது கிட்டத்தட்ட 540,000 சதுர அடிக்கு சமமானதாகும். இந்த வின்ட் டர்பைன் மூலம் ஒரு வருடத்திற்கு மூன்று உறுப்பினர்களைக் கொண்ட 36,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும் என்று த்ரீ கோர்ஜஸ் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த டர்பைனின் வடிவமைப்பாளரான மிங்யாங் ஸ்மார்ட் எனர்ஜி, இந்த டர்பைன் வினாடிக்கு 79.8 மீட்டர் வரையிலான தீவிர காற்றின் வேகத்தைத் தாங்கும் என்று முன்னர் உறுதியளித்தார். அதன்படி சமீபத்தில், கிழக்கு ஆசியாவில் தலிம் சூறாவளி தாக்கியபோது இந்த டர்பைன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.