அதிக வெப்பநிலை.! ஐரோப்பாவில் 3 மாதத்தில் 15,000 உயிரிப்புகள்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!
ஐரோப்பாவில் அதிக வெப்பநிலை காரணமாக 3 மாதத்தில் 15,000 மக்கள் உயிரிந்துள்ளதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகின் பல பகுதிகளில் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் இதுவரை இருந்த வெப்பநிலையை விட தற்பொழுது அதிகமாக உள்ளது. அந்த வகையில், ஐரோப்பாவின் பல பகுதிகள் கடந்த 2022ம் ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு முதன்முறையாக 40-க்கும் மேற்பட்ட டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு செய்துள்ளது.
முன்னதாக, உலக வானிலை அமைப்பு (WMO) புதிய வருடாந்திர காலநிலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கடந்த ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட அசாதாரண வெப்பம், பல நாடுகளில் பதிவு செய்யப்பட்ட வெப்பநிலையை விட அதிகமாக இருந்தது என்றும் இந்த வெப்பநிலையால் குறைந்தது 15,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2022ம் ஆண்டில் கோடை காலத்தில், ஸ்பெயினில் சுமார் 4,600 பேர், ஜெர்மனியில் 4,500 பேர், ஐக்கிய இராச்சியத்தில் 2,800 பேர், பிரான்சில் 2,800 பேர் மற்றும் போர்ச்சுகலில் 1,000 பேர் அதிக வெப்பநிலையால் இறந்துள்ளதாகவும் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள 95 மில்லியன் (9.5 கோடி) மக்கள் ஏற்கனவே காலநிலை மாற்ற காரணங்களால் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது. “காலநிலை அல்லது வானிலை தொடர்பான நிகழ்வுகளில் இடம்பெயர்ந்த பெரும்பாலான மக்கள் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே இருந்தனர், சில சூழ்நிலைகளில் மக்கள் பாதுகாப்பு மற்றும் உதவியைத் தேடி மற்றொரு இடத்திற்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.