‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!
ஹமாஸ் தலைவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாகக் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில் சுமார் 42,000-திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த போர் முற்றிய நிலையில் ஹமாஸுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியது.
அதற்குப் பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி மற்றும் முக்கிய தலைவர்களை இஸ்ரேல் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் நேற்று காசாவில் நடத்திய தாக்குதலில் தற்போதைய ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் உயிரிழந்துள்ளார்.
இவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இஸ்ரேலில் மக்கள் இனிப்புகள் வழங்கி திருவிழாவைப் போலச் சாலையில் ஆடிப்பாடிக் கொண்டாடி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் பிரதமர், இது இதோடு நிற்காது எனவும் ஒட்டுமொத்த ஹமாஸ் தலைவர்களை அழிப்போம்’ எனவும் கூறியிருந்தார்.
அதன் பின், இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸ், ‘ஹமாஸ் தலைவரின் மரணம் ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரு நன்மை ஏற்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டம் அமெரிக்காவில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஹமாஸ் தலைவர் மரணம் குறித்து கமலா ஹாரிஸ் பேசுகையில், “ஹமாஸ் தலைவர் சின்வார் மரணம் அடைந்துள்ளார் என இஸ்ரேல் உறுதி செய்துள்ளது. நீதி வழங்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஒட்டு மொத்த உலக நாடுகளுக்கும் நன்மை ஏற்பட்டுள்ளது.
சின்வாரின் கைகளில் அமெரிக்காவின் ரத்தமும் இருந்தது. ஆனால் தற்போது, ஹமாஸ் அமைப்பால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிம்மதி ஏற்பட்டிருக்கும். அமெரிக்கர்களைப் படுகொலை செய்யும், அச்சுறுத்தும் எந்தவொரு பயங்கரவாதிக்கும் நான் கூறுவது என்னெவன்றால், ‘நாங்கள் உங்களை நீதியின் முன் நிறுத்துவோம்’ என்பது தான்.
இஸ்ரேலுக்கு, தன்னை பாதுகாத்துக் கொள்ள எல்லா உரிமையும் உள்ளது. இஸ்ரேலுக்கு விடுத்த ஹமாஸ் அமைப்பின் மிரட்டல் நீக்கப்பட வேண்டும். அந்த இலக்கை நோக்கித் தெளிவான முன்னேற்றம் இன்று ஏற்பட்டுள்ளது. இதனால் காசாவில் போர் முடிவுக்கு வருவதற்கான ஒரு வாய்ப்பை இந்த தருணம் நமக்கு ஏற்படுத்தித் தந்துள்ளது.
போர் நிச்சயம் முடிவுக்கு வரவேண்டும். இதனால், இஸ்ரேலின் பணயக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள். மேலும், பாலஸ்தீனிய மக்கள் தங்களுடைய சுதந்திரம் மற்றும் சுய நிர்ணயம் செய்வதற்கான உரிமையை உணர்வார்கள்”, எனக் கமலா ஹாரிஸ் பேசி இருந்தார்.