பாகிஸ்தான் தேசிய சட்டமன்றம் ஆகஸ்ட் 9ம் தேதி கலைக்கப்படும்.! பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அறிவிப்பு..!
பாகிஸ்தான் பாராளுமன்றம் பதவிக்காலம் முடிவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக, வரும் ஆகஸ்ட் 9ம் தேதி பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளதாக பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். நேற்று (ஆகஸ்ட் 3ம் தேதி) ஆளும் கூட்டணிக் கட்சி உறுப்பினர்களை கௌரவிக்கும் வகையில் பிரதமர் மாளிகையில் விருந்து ஒன்று நடைபெற்றது.
அந்த விருந்தில் நாடாளுமன்றத் தலைவர்களைச் சந்தித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை கலைப்பதற்கான முறையான அறிவிப்பை பிரதமர் ஷெஹ்பாஸ் ஆகஸ்ட் 9ம் தேதி குடியரசுத் தலைவர் ஆரிஃப் ஆல்விக்கு அனுப்புவார்.
அரசியலமைப்பு விதிகளின்படி, இந்த முடிவை நடைமுறைப்படுத்துவதற்கு 48 மணி நேரத்திற்குள் குடியரசுத் தலைவர் அறிவிப்பில் கையெழுத்திட வேண்டும். அந்த அறிவிப்பில் குடியரசுத் தலைவர் கையெழுத்திடவில்லை என்றால், பேரவை தானாகவே கலைக்கப்படும் என்று தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இதனால் 90 நாட்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும். அரசியலமைப்பின் படி, பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை நிறைவடைந்ததும், தேர்தல் 60 நாட்களில் நடத்தப்படும். ஆனால் பதவிக்காலம் முடிவதற்கு முன்கூட்டியே கலைக்கப்பட்டால், தேர்தல் காலம் 90 நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.