உக்ரைனை தாக்க சென்ற ஏவுகணை.? உள்ளூரில் வெடித்து சிதறிய ரஷ்ய போர் விமானம்.!
ரஷ்யாவின் பெல்கொரோட் நகரத்தில் பயங்கர குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் கடந்த ஒரு வருட காலமாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி 2022ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியதிலிருந்து ராணுவ ஜெட் விமானங்கள் உக்ரைன் நாட்டை நோக்கி ரஷ்யாவின் மேல் தொடர்ந்து பறந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று ரஷ்யாவின் பெல்கொரோட் நகரத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.
பெல்கோரோட் பிராந்தியத்தின் ஆளுநர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ், கூறுகையில், இந்த குண்டுவெடிப்பு நகர மையத்தில் சுமார் 65 அடி ஆழமுள்ள பள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இரண்டு பெண்கள் காயமடைந்ததாகவும், நான்கு அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் நான்கு கார்களை சேதப்படுத்தியதாகவும் கூறினார்.
இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் என்ன என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை, ஆனால் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பெல்கோரோட் நகரின் மீது வான்வழிப் படைகளின் எஸ்யூ-34 (Su-34) விமானம் பறக்கும் போது, விமானத்தில் உள்ள வெடிமருந்து வெடித்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.