3 மணி நேரம் தாமதம்… இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் அமல்!
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி இன்று விடுவிக்கப்பட உள்ள 3 பணய கைதிகளின் விவரங்களை ஹமாஸ் வெளியிட்டதை தொடர்ந்து போர் நிறுத்தமானது அமலாகியுள்ளது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது. காசா நகரில் இன்று (ஜனவரி 19) முதல் 6 வார காலத்திற்கு போர் நிறுத்தம் அமலில் இருக்கும் எனவும், இந்த போர் நிறுத்த காலத்தில் இரு தரப்பும் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை விடுவிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.
முதலில் இன்று ஹமாஸ் தரப்பில் உள்ள 33 பணய கைதிகளில் 3 பேரை காசா நகரில் அனுப்புவதாக ஹமாஸ் தரப்பு கூறியிருந்தது. ஆனால், போர் ஒப்பந்த விதிமுறைப்படி ஹமாஸ் தரப்பு தாங்கள் வெளியிடும் பணய கைதிங்களின் விவரங்களை வெளியிடாமல் இருந்தது. இதனால், பணய கைதிகளின் விவரங்களை வெளியிடும் வரை போர் நிறுத்தம் அமல்படுத்தப்படாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதனை இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளரும் உறுதி படுத்தினார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு மீறினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்க இஸ்ரேல் ராணுவம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனால் போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், தற்போது ஹமாஸ் அமைப்பு இன்று விடுவிக்கும் பணய கைதிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு போர் நிறுத்தம் அமலாகியுள்ளது. ஹமாஸ் தரப்பு பணய கைதிகளின் விவரங்களை வெளியிடாமல் இருந்ததால் போர் நிறுத்தம் 3 மணி நேரம் தாமதமாக அமலாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.