ஜப்பானை காலி செய்ய காத்திருக்கும் பெரிய ஆபத்து – 3 லட்சம் மக்கள் உயிரிழக்க வாய்ப்பு.!
ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பலியாக வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய ஷாக்கிங் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் அரசு நிறுவனம் ஒரு மெகா நிலநடுக்கம் அதாவது ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று கணித்துள்ளது.
அந்த ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால், 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படும், இதனால் மூன்று லட்சம் பேர் உயிரிழந்து விடுவார்கள். இதன் காரணமாக கடலில் சுனாமி ஏற்படும், பல நகரங்கள் கடலில் மூழ்கிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் அரசாங்கத்தின் புதிய அறிக்கையின்படி, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு மெகா நிலநடுக்கம் நாட்டின் பசிபிக் கடற்கரையில் தாக்கக்கூடும் என்றும், இது பேரழிவு தரும் சுனாமியைத் தூண்டும் என்றும் எச்சரித்துள்ளது. ஆனால், அது எப்போது என்ற கால அளவு ஏதேனும் குறிப்பிடப்படவில்லை. இதன் காரணமாக, நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்படும். இது நடந்தால், ஜப்பானின் பொருளாதாரம் டிரில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான இழப்பை சந்திக்க நேரிடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், 12.3 மில்லியன் மக்கள் (நாட்டின் மக்கள் தொகையில் 10%) புலம்பெயர வேண்டியிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரம், ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதி அழிக்கப்படும். எனவே, இதைச் சமாளிக்க ஏற்கனவே ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, ஜப்பானின் பசிபிக் கடற்கரையோரத்தில் உள்ள நங்கை பள்ளத்தாக்கு என்ற 900 கிலோமீட்டர் நீளமுள்ள கடலுக்கு அடியில் உள்ள பள்ளத்தாக்கை மையமாகக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தாக்கு, பிலிப்பைன் கடல் தட்டு, யுரேசிய தட்டுக்கு அடியில் நகரும் ஒரு பகுதியாகும். இங்கு கடந்த 1,400 ஆண்டுகளாக ஒவ்வொரு 100 முதல் 200 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த 2011 ஆம் ஆண்டு 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், வடகிழக்கு ஜப்பானில் உள்ள ஒரு அணு மின் நிலையத்தில் பேரழிவை ஏற்படுத்தியது மற்றும் மூன்று உலைகள் உருகி 15,000 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.