கருங்கடலில் பதற்றம்.. அமெரிக்க ஆளில்லா விமானத்தை தாக்கியது ரஷ்ய போர் விமானம்!
கருங்கடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ரஷ்ய போர் விமானம் மோதி தாக்கியது.
கருங்கடல்:
கருங்கடலில் அமெரிக்க கண்காணிப்பு ஆளில்லா விமானத்தின் ப்ரொப்பல்லரை “சர்வதேச சட்டத்தை மீறி” ரஷ்ய போர் விமானம் தாக்கியுள்ளது. துருக்கி, பல்கெரியா, உக்ரைன் என்று பல நாடுகளின் எல்லையில் கருங்கடல் உள்ளது. ரஷ்யா இதன் இன்னொரு எல்லையில் உள்ளது. அதுமட்டுமில்லாமல், பல நாடுகளின் எல்லையாக இருக்கும் கருங்கடலை ரஷ்யா, தனது அதிகார மையமாக பார்த்து வருகிறது.
யாருக்கு ஆதிக்கம்:
மறுபக்கம், இந்த கருங்கடலில் யாருக்கு ஆதிக்கம் அதிகம் என்பதில் ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, துருக்கி இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இதற்கேற்ப ஒவ்வொரு நாடும் தங்கள் கடல் எல்லையில் கடற்படை தளங்களையும் அமைத்து உள்ளது. கருங்கடல் அமெரிக்க எல்லையில் இல்லையென்றாலும், மற்ற நாடுகளை பாதுக்கப்பதாக கூறிக்கொண்டு அங்கு ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ரஷ்யா தாக்குதல்:
ரஷ்யாவும் நவீன ஆயுதங்கள் பொருந்திய ட்ரோன்கள் மூலம் கருங்கடலில் பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறது. இந்த நிலையில், கருங்கடல் பகுதியில் அமெரிக்கா – ரஷ்யா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கருங்கடலில் பாதுகாப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ரஷ்ய போர் விமானம் மோதி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் அந்த ஆளில்லா விமானம் கருங்கடலில் விழுந்து நொருங்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எரிபொருளை ஊற்றி தாக்குதல்:
அமெரிக்க ராணுவத்தின் எம்.க்யூ -9 ரக (MQ-9 Reaper) ஆளில்லா டிரோன் சர்வதேச விமானங்களை கண்காணித்து வந்தபோது அதனை இடைமறித்து ரஷ்ய போர் விமானம் அமெரிக்க டிரோன் மீது மோதியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இரண்டு சுகோய் 27 விமானங்கள், அமெரிக்கா ஆளில்லா விமானம் மீது இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. ரஷ்யாவின் இரண்டு விமானங்களும், அமெரிக்கா ஆளில்லா விமானத்தை சுற்றிவளைத்து எரிபொருளை ஊற்றி உள்ளதாகவும், கடைசியில் வேகமாக வந்து அந்த ட்ரோன் மீது மோதி தாக்கி உள்ளன.
இந்த திடீர் தாக்குதலால் கருங்கடல் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைனில் மாஸ்கோவின் போரில் பதட்டங்களை எழுப்பிய இந்த சம்பவம், பனிப்போர் உச்சக்கட்டத்திற்குப் பிறகு முதல் முறையாக ரஷ்ய போர் விமானம் மோதி அமெரிக்க விமானம் வீழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.