விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்! உடல்நிலை எப்படி இருக்கிறது? என்ன உணவு உட்கொள்கிறார்?
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் நலமுடன் உள்ளார். விண்வெளி வீரர்களுக்கு 3.8 பவுண்டுகள் அளவுள்ள உணவு தினசரி வழங்கப்படுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா விண்வெளி நிலையத்தில் இருந்து போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் கடந்த ஜூன் மாதம் விண்ணிற்கு சென்றார்.
8 நாள் பயணம் என்று தான் இந்த விண்வெளி பயணம் தொடங்கியது. ஆனால் 160 நாட்கள் கடந்தும் இன்னும் பூமிக்கு திரும்பாமல் விண்வெளியில் இருக்கிறார்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர். இவர்கள் இருவரும் எப்போது பூமிக்கு திரும்பி வருவார்கள் என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது. மேலும், அவர்கள் தற்போது நலமுடன் உள்ளனரா? அவர்களின் உணவு முறை என்ன என்ற கேள்விகளும் எழுகிறது.
இதற்கு அவ்வப்போது அமெரிக்க விண்வெளி தளமான நாசாவும், சர்வதேச விண்வெளி மையமான ISS-ம் விளக்கம் அளித்து வருகிறது. ஸ்டார்லைனர் விண்கல ஊழியர் ஒருவர் அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், விண்வெளி வீரர்களுக்கு விண்கலத்தில், பால் பவுடர், பீட்சா, இறால், சிக்கன் மற்றும் டுனா போன்ற பலவகையான பதப்படுத்தப்பட்ட உணவுகள் கிடைக்கும் என்றும், விண்வெளி வீரர்கள் போதுமான கலோரி உட்கொள்வதை சர்வதேச விண்வெளி மையம் உறுதி செய்து வருவதாகவும் கூறினார்.
மேலும், விண்ணில் இருக்கும் சர்வதேச விண்வெளி மையத்தில் (ISS) 530 கலோன்கள் தண்ணீர் இருக்கும் என்றும், அதனை சர்வதேச விண்வெளி வீரர்கள் பயன்படுத்தி கொள்வார்கள் என்றும், சர்வதேச விண்வெளி வீரர்கள் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 3.8 பவுண்ட் (1.7 கிலோ) உணவு வழங்கப்படுகிறது என்றும், விண்வெளி வீரர்களின் வியர்வை மற்றும் சிறுநீர் ஆகியவை சுத்தீகரிக்கப்பட்டு தூய நீராக மாற்றப்பட்டு அவையும் விண்வெளியில் உபயோகப்படுத்தப்படும் எனவும் நியூயார்க் போஸ்ட் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் எடை குறைந்துள்ளது, அவர் மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று எழுந்த சர்ச்சைகளுக்கு விண்வெளியில் இருந்து புகைப்படம் அனுப்பி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சுனிதா வில்லியம்ஸ். வரும் பிப்ரவரி மாதம் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்புவார்கள் என நாசா தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.