“ஒருவித அழுத்தமான சூழல்., ஆனாலும்., ” சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!
சுனிதா மீட்ப பயணம் குறித்து நாசா குழு கூறுகையில், விண்கலம் புறப்படுவதற்கு முன்னதாக, இங்கு பணிபுரியும் நாசா விண்வெளி ஆய்வாளர்கள் அனைவரும் ஒருவித மன அழுத்தத்தில் இருந்ததாகவும் ஆனால் இது உற்சாகமான ஒரு நிகழ்வு என்றும் கூறியுள்ளனர்.

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்பதற்கு எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தற்போது நாசா உடன் இணைந்து முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதற்காக கடந்த மார்ச் 13-ஆம் தேதியன்றே க்ரூ டிராகன் விண்கலமானது புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 எனும் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அன்று க்ரூ டிராகன் ஏவப்படும் ராக்கெட் ஏவுதளத்தில் (Launch Pad) உள்ள ஹைட்ராலிக் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அந்த முடிவு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.
அதனைத் தொடர்ந்து, இந்திய நேரப்படி நேற்று (மார்ச் 14) இரவு 7 மணியளவில் புளோரிடாவில் இருந்து க்ரூ டிராகன் விண்ணில் புறப்பட்டது. இதில், அன் மெக்லெய்ன் (நாசா), நிக்கோல் ஏயர்ஸ் (நாசா), டாகுயா ஓனிஷி (ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் – ஜாக்சா), கிரில் பெஸ்கோவ் (ரோஸ்கோஸ்மோஸ் – ரஷியா) என மொத்தம் 4 பேர் பயணம் செய்துள்ளனர்.
இவர்கள் சென்ற விண்கலம் , சர்வதேச விண்வெளி மையத்தை இந்திய நேரடி மார்ச் 16 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் சென்றடையும் எனக் கூறப்படுகிறது. தற்போது ஃபால்கான் 9 விண்கலத்தில் இருந்து க்ரூ டிராகன் தனியாக பிரிந்து சென்றது என ஸ்பேஸ் எக்ஸ் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் மார்ச் 19ஆம் தேதி பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப்பயணம் குறித்து நாசா குழு கூறுகையில், க்ரூ 10 விண்கலம் புறப்படுவதற்கு முன்னதாக, இங்கு பணிபுரியும் நாசா விண்வெளி ஆய்வாளர்கள், மற்றும் மற்ற வீரர்கள் அனைவரும் ஒருவித மன அழுத்தத்தில் இருந்தார்கள் எனவும், ஆனால் இது உற்சாகமான ஒரு நிகழ்வு என்றும் அவர்கள் கூறினர்.
விண்கலத்தில் பயணிக்கும் மெக்லைன் கூறுகையில், “நண்பர்களாக இருப்பதை விட எதிரிகளாக இருப்பது மிகவும் எளிது. ஒரு கூட்டாண்மைகளையும் உறவுகளை உருவாக்குவதை விட அவற்றை உடைப்பது எளிது.” என்று நாசா நேரடி ஒளிபரப்பின் போது சுற்றுப்பாதை பயணத்தின் போது இதனைக் கூறினார் எனக் கூறப்படுகிறது.