பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதல்? 22 பேர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் தற்கொலைப் படை நடத்தியதாக கருதப்படும் கொடூர தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் அமைந்துள்ள பலுசிஸ்தான் ரயில் நிலையத்தில் இன்று காலை 9 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி குண்டு ஒன்று வெடித்துள்ளது. இதில் ஏற்பட்ட தாக்காததால் அங்கிருந்த மக்கள் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
இதனால், சம்பவ இடத்திலேயே 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிகழ்வு நடந்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இது ஒரு தற்கொலைப் படைத் தாக்குதளாக இருக்கலாம் என கண்டறிந்துள்ளனர்.
மேலும், இன்று சரியாக 9 மணிக்கு அந்த ரயில் நிலையத்தில் தினமும் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் செல்வது வழக்கம். ஆனால், அந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று சரியான நேரத்திற்கு அங்கு வரவில்லை.
மேலும், இந்த வெடிகுண்டு முன்பதிவு அலுவலகத்திற்கு முன்பு வெடித்துள்ளதாலும், ரயில் கிளம்பும் சமயத்தில் வெடிகுண்டு வெடித்துள்ளதாலும் ரயிலை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் எனவும் அதிகாரிகளால் கூறப்படுகிறது.
ஒரு வேளை ரயில் அந்த சமயத்தில் அங்கு இருந்திருந்தால் உயிரிழப்பு மேலும் அதிகரித்திருக்கும் என கருதப்படுகிறது. இந்த வெடிகுண்டு விபத்தில் காயமடைந்தப் பயணிகளில் சிலரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்து வருகிறது.
இதனால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், வெடிகுண்டுச் சம்பவம் நடந்த இந்த ரயில் நிலையத்தில் மோப்பநாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.