பூமிக்கு திரும்பிய “ஸ்டார்லைனர்” விண்கலம்! சுனிதா வில்லியம்ஸின் நிலை என்ன?
'ஸ்டார்லைனர் விண்கலம்' இன்று காலை ஆளில்லாமல் தனியாக ஒயிட் சேண்ட்ஸ் ஸ்பேஸ் ஹார்பர் பகுதியில் 9.31 மணிக்கு பூமிக்கு வந்தடைந்தது.
மெக்சிகோ : விண்வெளி சோதனைப் பயணமாகக் கடந்த ஜூன்-5ம் தேதி விண்வெளிக்கு ஏவப்பட்ட ஸ்டார்லைனர் விமானம் ஆளில்லாமல் நியூமெக்சிகோவில் உள்ள ஒயிட் சேண்ட்ஸ் ஸ்பேஸ் ஹார்பர் பகுதியில் தரையிறங்கியது.
பாராசூட்டின் உதவியுடன் இன்று காலை 9.31 மணி (இந்திய நேரப்படி) அளவில் தரையிறங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன்-5ம் தேதி விண்வெளி சோதனைக்காக 8 நாள் பயணமாகப் புகழ் பெற்ற விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் ஸ்டர்லைனர் விண்கலம் மூலம் புறப்பட்டனர்.
8 நாள் அதாவது ஜூன் 14ஆம் தேதி பூமிக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ‘ஸ்டார்லைனர்’ விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவராலும் பூமிக்குத் திரும்புவதில் சிக்கலில் முடிந்தது.
இதன் விளைவாக சுமார் 80 நாட்களுக்கும் மேலாக இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ளனர். இந்த நிலையில் தான் இன்று காலை இருவரையும் ஏற்றி பூமிக்கு வரவிருந்த இந்த ஸ்டர்லைனர் விண்கலம் ஆளின்றி பூமிக்குத் திரும்பி இருக்கிறது.
மேலும், இனி வரும் நாட்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதன்பின் அடுத்த ஆண்டு அடுத்த ஆண்டு 2025ம் ஆண்டில், “ஸ்பேஸ் எக்ஸ்” நிறுவனத்தின் ‘டிராகன் க்ரூ’ எனும் விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்ல இருக்கிறது.
இந்த ‘டிராகன் க்ரூ’ விண்கலத்தில் தான் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸையும், வில்மோரையும் பூமிக்கு அழைத்து வரத் திட்டமிட்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.