விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இலங்கை தேர்தல்! மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார்?
நடைபெற்று வரும் இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கை வாழ் தமிழர்கள் 40 லட்சம் பேர் வரிசையில் நின்று வாக்குச் செலுத்தி வருகின்றனர்.
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிடுகிறார். இந்த நிலையில் அவரை எதிர்த்து, எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசா களம் போட்டியிடுகிறார்.
மேலும், இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவரான அனுரா குமாரா திசநாயகே, தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறார். இந்த மூவருக்கும் இடையே கடுமையான மும்முனை போட்டி நிலவி வருகிறது. இவ்ரகள் உட்பட மேலும் 38 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களமிறங்கி உள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இன்று மாலை 4 மணி வரை இந்த தேர்தல் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். தேர்தல் தொடங்கிய 3 மணி நேரத்தில் 21.69% சதவீத வாக்குகள் பதிவானதாக கூறப்படுகிறது.
இலங்கையில், மக்கள் தொகை 1.7 கோடியாக இருந்து வரும் நிலையில் அதில் தமிழ் வாழ் மக்கள் மட்டுமே 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இன்று காலை முதல் அவர்களும் வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். மேலும், அந்த 40 லட்ச தமிழர்கள் வாக்களிக்க உள்ள அந்த வாக்காளர் யார் என்பதை தெரிந்து கொள்வதிலும் மிகுந்த எதிர்பார்ப்பு என்பது உருவாகி இருக்கிறது என கருதப்படுகிறது.
நடைபெற்று வரும் தேர்தலில் நடைமுறைகள், வாக்குப்பதிவு, மக்கள் வருகை, நடத்தை விதிகள் என அனைத்தையும் ஐரோப்பிய குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இன்று மாலை தேர்தல் முடிவடைந்த பிறகு வாக்கு எண்ணிக்கை பணிகள் தொடங்கி, நாளை பிற்பகலுக்குள் புதிய அதிபர் யார் என்று அறிவிக்கப்படுவார் என கூறப்படுகிறது.