இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர்: இஸ்ரேலியர்களை பிணை கைதியாக பிடித்த ஹமாஸ்!

காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வந்த நிலையில், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டுள்ளது. கடந்த 16 ஆண்டுகளில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல போர்கள் நடந்துள்ளன.
இந்நிலையில், நேற்று காசா பகுதி வழியாக பாலஸ்தீன தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி இஸ்ரேல் மீது ஒரே நேரத்தில் 5000 ராக்கெட்டுகளை ஏவியுள்ளனர். இதுவரை, இருதரப்பினரும் சேர்த்து இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலிய நகரங்களுக்குள் நுழைந்து பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இது ஒருபக்கம் இருக்க, காசாவில் ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்களை பிணைக் கைதிகளாக வைத்திருப்பதை இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
இருந்தாலும், ஹமாஸால் கைப்பற்றப்பட்ட பிணைக் கைதிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை இஸ்ரேலிய இராணுவம் வெளியிடவில்லை. ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலிய இராணுவத்தினரையும் பொதுமக்களையும் காசா பகுதிகளில் பிணைக் கைதிகளாக இழுத்துச் செல்லும் வெடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், அந்த வீடியோக்களின் உண்மைத்தன்மை சரிபார்க்க முடியவில்லை.
அந்த வகையில், காசா பகுதியைக் கட்டுப்படுத்தும் பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் படையினர், இஸ்ரேலைச் சேர்ந்த 3 பேரைப் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், போர் குறித்து ட்வீட் செய்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஹமாஸ் இயக்கத்தினர் எங்கெல்லாம் ஊடுருவி ஒளிந்துள்ளார்களோ அந்த இடங்களை இடித்து தள்ளுவோம். காசாவில் வசிப்பவர்களே, நாங்கள் கடுமையாக தாக்குவோம். இப்போதே வெளியேறிவிடுங்கள்” என எச்சரித்துள்ளார். அதன்படி, தற்போது தாக்குதல் நடவடிக்கை தொடங்கியுள்ளது.