விண்ணில் வெடித்து சிதறிய மஸ்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட்!
நேற்று விண்ணில் ஏவப்பட்ட ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் 8 விண்கலமானது வானில் வெடித்து சிதறி கரீபியன் கடலில் விழுந்துள்ளது.

டெக்சாஸ் : உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நேற்று ஸ்டார்ஷிப் 8 விண்கலத்தை விண்ணில் ஏவியது. இந்த விண்கலமானது விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக வானில் அந்த விண்கலம் வெடித்து சிதறடிக்கப்பட்டது. இதனை அடுத்து விண்ணில் அதன் துகள்கள் பரவியது. இதனால் அப்பகுதியில் விமான சேவையும் பாதிக்கப்பட்டது.
தெற்கு டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து போகா சிகா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து வியாழன் அன்று மாலை 6.30 மணியளவில் (அமெரிக்க உள்ளூர் நேரப்படி) 403 அடி (123 மீட்டர்) உயரம் கொண்ட ஸ்டார்ஷிப் 8 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலமானது சுமார் 100-150 டன்கள் எடை அளவுக்கு பொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும்.
விண்ணில் ஏவப்பட்ட ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் 8 விண்கலம் ஏவப்பட்ட 9.30 நிமிடங்களில் வானில் வெடித்து சிதறியது. இதன் பாகங்கள் தெற்கு புளோரிடா மற்றும் பஹாமாஸ் பகுதியில் விழும் என்பதால், ஃபெடரல் ஏவியேஷன் (FAA) தனது விமான சேவைகளை குறிப்பிட்ட பகுதிகளில் நிறுத்தி வைத்தது.
மியாமி, ஃபோர்ட் லாடர்டேல், பாம் பீச் மற்றும் ஆர்லாண்டோ விமான நிலையங்களில் விமானங்கள் பறக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. ஸ்டார்ஷிப் புறப்பட்ட பிறகு, ஸ்பேஸ்எக்ஸ் சமூக வலைதள கணக்கில் நேரடி ஒளிபரப்பின் போது ராக்கெட்டின் மேல் நிலை விண்வெளியில் சுழல்வதைக் காட்டியது. அதன் பிறகு ராக்கெட்டின் இயந்திரங்களின் காட்சிப்படுத்தும்போது இயந்திரங்கள் நிறுத்தப்படுவதை அது காட்டியது. அதன் பிறகு ஸ்பேஸ்எக்ஸ் விண்கலத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஸ்பேஸ்எக்ஸ் அளித்த தகவலின்படி, ஸ்டார்ஷிப் சோதனை தோல்வி அடைந்தது என்றும், முந்தைய ஸ்டார்ஷிப் சோதனைக்குப் பிறகு கிட்டத்தட்ட சில மாதங்கள் ஆராய்ச்சிக்கு பிறகு இச்சோதனை செய்யப்பட்டது என்றும், இருந்தும் அத்தகைய பேரழிவை சந்திக்க நேர்ந்தது என்று குறிப்பிடப்பட்டது.
ஸ்பேஸ்எக்ஸ் கூற்றுப்படி ஸ்டார்ஷிப் விண்கலமானது பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் உள்ள கிரகங்களுக்கு மனிதர்கள் மற்றும் விண்வெளி பொருட்களை எடுத்துச் செல்ல வடிவமைக்கப்பட்ட ஒரு முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்வெளி போக்குவரத்து அமைப்பு என கூறப்படுகிறது. ஸ்டார்ஷிப் என்பது உலகின் மிகவும் சக்திவாய்ந்த விண்வெளி வாகனமாகும். இது 150 மெட்ரிக் டன் வரை முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையிலும், 250 மெட்ரிக் டன் வரை ஆற்றல் செலவழியும் வடிவிலும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. விண்ணில் வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப் விண்கலத்தின் பாகங்கள் தெற்கு புளோரிடா மற்றும் பஹாமாஸ் பகுதி கரீபியன் கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது.
கடலில் விழுந்த பாகங்கள் குறித்து ஸ்பேஸ்எக்ஸ் கூறுகையில், விண்கலத்தில் நச்சு பொருட்கள் எதுவும் இல்லை. இதனால் கடல் வளம் பாதிக்கப்படாது. இதுபோன்ற தவறுகள் மூலம் கற்றுக்கொள்வதால் அடுத்து வெற்றி கிடைக்கிறது. இந்த விண்கலம் வெடித்து சிதறியது குறித்து அமெரிக்க விண்கலத்துடன் முழுமையான விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.