பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!
சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள சுனிதா வில்லியம்சை மீட்க நாளை ஸ்பேஸ் எக்ஸின் க்ரூ டிராகன் விண்கலம் விண்ணில் பாய உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார் லைனரின் போயிங் விண்கலம் மூலம் விண்வெளிக்கு சென்றனர். அங்கு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 10 நாட்கள் பயணமாக சென்றவர்கள், அவர்கள் சென்ற விண்கலம் பழுது ஏற்பட்டதன் காரணமாக விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனால் 10 மாதங்கள் ஆகியும் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் விண்வெளிக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். இவர்களை மீட்க நாசா உடன் இணைந்து எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் முயற்சி வந்தாலும் இறுதியான முடிவுகள் தெரியவராமல் இருந்தது. இந்நிலையில் இரு விண்வெளி வீரர்களையும் மீட்கும் பொருட்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசாவுடன் இணைந்து நாளை க்ரூ டிராகன் விண்கலத்தை விண்ணில் செலுத்த உள்ளது.
க்ரூ டிராகன் விண்கலமானது புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 எனும் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. இந்திய நேரப்படி நாளை காலை 5 மணி அளவில் விண்ணில் பாய உள்ளது. இந்த விண்கலத்தில் 4 விண்வெளி வீரர்கள் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இவர்கள் செல்லும் க்ரூ டிராகன் விண்கலமானது சர்வதேச விண்வெளி நிலையத்தில் டாக்கிங் (இணைப்பு) செயல்முறையில் இணைக்கப்பட்டு அதன் பிறகு 4 விண்வெளி வீரர்கள் , சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோருக்கு மாற்றாக அங்கு இருப்பார்கள். அதன் பிறகு டீடாக்கிங் (பிரிவு) செயல்முறை செய்ப்பட்டு மார்ச் 16ஆம் தேதியன்று சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் க்ரூ டிராகன் மூலம் பூமிக்கு திரும்புவார்கள்.
சவால்கள் :
இந்த செயல்முறை எளிதாக விளக்கப்பட்டாலும், அதில் பலவித சோதனைகள் உள்ளன எனவும், அவர்கள் வீடு திரும்புவது சாதாரணமாக இருக்காது எனவும் விண்வெளி வீரர்கள் தெரிவிக்கின்றனர். நியூஸ்நேசன் செய்தி நிறுவனத்திடம் பேசிய முன்னாள் நாசா விண்வெளி வீரர் லெராய் சியாவோ, விண்வெளி வீரர்கள் நீண்ட விண்வெளி பயணத்திற்குப் பிறகு அவர்கள் கால்கள் ஒரு குழந்தையின் கால்கள் போல செயல்படும் என தெரிவிக்கிறார்.
மேலும், அவர்கள் மேல் தோலின் தடிமனான பகுதி அதன் தன்மையை இழக்கும் என்றும் சியாவ் கூறினார். இதனால் எடைகுறைவு, கால் தசை சக்தி குறைவு போன்றவை ஏற்படும் என்றும் வலியுறுத்தினார். விண்வெளியில் எடையற்ற சூழலில் வாழ்ந்தால், பூமியின் சூழல் அவர்களுக்கு மிகவும் வினோதமாகவும், கடினமாகவும் இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் ஆகியவை விண்வெளி வீரர்கள் பூமி திரும்பும் போது சந்திக்கும் பெரும்பாலான பக்க விளைவுகள் என்றும் சியாவோ கூறினார். என்னைப் பொறுத்தவரை அவர்கள் பூமிக்கு வந்தாலும் இயல்பு நிலைக்கு திரும்ப இரண்டு வாரங்கள் ஆகும் என்று குறிப்பிட்டார்.
விண்வெளி வீரர் டெர்ரி விர்ட்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்புகையில் மிகவும் கனமாகவும் உண்மையில் மயக்கமாகவும் உணர்ந்தேன் என்று அவர் கூறினார். விண்வெளியில் இருந்து திரும்பி வந்த பிறகு, உடல் பழகுவதற்கு வாரங்கள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மார்ச் 16ல் விண்வெளில் இருந்து பூமிக்கு புறப்படும் சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 18இல் பூமி திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பூமி திரும்புகையில் விண்கலம் அதீத வெப்பத்தை வெளியிடுவதால் அதனை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திலும், பத்திரமாக தரையிறங்கும் சூழலையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் உள்ளனர்.